மகளின் காதலால் ஆத்திரம் : காதலன் குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற தந்தையின் வெறிச்செயல்..!
பஞ்சாபில் மகளின் காதலனின் குடும்பத்தினர் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தலைமறைவான தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது குர்தஸ்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பதாலா நகரத்தில் அமைந்துள்ளது பல்லர்வால் கிராமம். இந்த கிராமத்தில் வசித்த வருபவர் சுக்ஜிந்தர்சிங். இவருக்கு 10-ஆம் வகுப்பு படித்து வரும் மகள் ஒருவர் உள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கும் அதே கிராமத்தில் வசித்து வரும் ஹர்மன்தீப் சிங் என்ற இளைஞனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரம் அடைந்த சுக்ஜிந்தர்சிங் நேற்று காலை ஆத்திரத்துடன் ஹர்மன்தீப்சிங் வீட்டிற்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கே ஹர்மன்தீப் சிங்கின் தந்தை சுக்வீந்தீர் சிங் மற்றும் ஹர்மன்தீப்சிங் மாமா ஜஸ்பீர்சிங் இருந்துள்ளனர். அவர்களை கண்டதும் சுக்ஜிந்தர்சிங் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர்கள் இருவருமே ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
பின்னர், ஆத்திரம் அடங்காமல் துப்பாக்கியுடன் வீட்டிற்கு உள்ளே சுக்ஜிந்தர்சிங் சென்றுள்ளார். அங்கு ஹர்மன்தீப்சிங்கின் பாட்டி மங்கல்சிங் மற்றும் அவர்களது உறவினர் பபன்தீப் இருந்துள்ளனர். அவர்களையும் சுக்ஜிந்தர்சிங் துப்பாக்கியால் சுட்டார். அவர்கள் இருவரும் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டு அங்கே வந்து ஹர்மன்தீப்சிங் மற்றும் அவர்களது உறவினர் ஜஷன்பிரீத் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் சுக்ஜிந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து சுக்ஜிந்தர் சிங் தப்பி ஓடிவிட்டார். சுக்ஜிந்திர் சிங் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், ஹர்மன்தீப்சிங் மற்றும் ஜஷன்பிரித் மட்டும் படுகாயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையால் தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த பஞ்சாப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 4 பேரை கொலை செய்த சுக்ஜிந்தர்சிங் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கூறிய பதாலாவின் எஸ்.எஸ்.பி.ராஷ்பால்சிங் சுக்ஜிந்தர் சிங் மற்றும் ஹர்மன்பீரித் சிங் குடும்பங்கள் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்தது. கடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் இரு குடும்பத்தினர் இடையில் முரண்பாடு இருந்தது. இரு குடும்பத்தினரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை இந்த கொலை சாதிப்பிரிவு பாகுபாடு காரணமாக நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். மேலும் தப்பி ஓடிய சுக்ஜிந்தர்சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.