விமான பயணத்தின்போது இனி மாஸ்க் அணிய வேண்டாம்... மத்திய அரசு அறிவிப்பு
விமான பயணத்தின் போது முகக்கவசத்தை அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கி வந்தது. இரண்டு கொரோனா அலைகள் காரணமாக உயிரிழப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக, இரண்டாவது கொரோனா அலை, இந்தியாவை உலுக்கி இருந்தது. பாதிப்பும் உயிரிழப்பும் அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்தது.
ஆனால், தடுப்பூசி விநியோகத்திற்கு பிறகு உயிரிழப்பு வெகுவாக குறைந்து, தற்போது அதன் தாக்கம் முற்றிலுமாக ஒழிந்துள்ளது. அங்கும் இங்கும் பாதிப்பு பதிவானாலும் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது, அது ஒன்றன் பின் ஒன்றாக திரும்ப பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விமான பயணத்தின் போது முகக்கவசத்தை அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
தற்போதுவரை, விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், விமான நிறுவனங்களுக்கு அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், "கொரோனா தொடர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனாவால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்து பயணிகளும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த அறிவிப்பின் விளைவாக, இனி, முகக் கவசம் அணியவில்லை என்றாலும் அபராதமோ நடவடிக்கையோ எடுக்கப்படாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவரின் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 0.02 சதவீதமே ஆகும். கொரோனாவில் இருந்து மீண்டவரின் விகிதம் 98.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,28,580 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரிட்டனில் இரண்டு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பிரிட்டன் முழுவதும் BQ.1 என்ற உருமாறிய கொரோனாவால் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். XBB என்ற உருமாறிய கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு உருமாறிய கொரோனாவும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை என்றும், தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
ஒமைக்ரான் கொரோனாவில் இருந்து இந்த இரண்டு கொரோனாவும் உருமாறியுள்ளது என்றும் இவற்றில் இருந்து உருமாறும் கொரோனாவால் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் நவம்பர் மாதத்திற்குள் புதிய கொரோனா அலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
இதேபோல சமீபத்தில், ஒமைக்ரான் கொரோனாவிலிருந்து BA.5.1.7 என்ற துணை வகை உருமாறியது. இது, அதிக தீவிர தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. BF.7 கொரோனா முதல்முறையாக குஜராத் உயிரிதொழில்நுட்பம் ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.