பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு: எதன் அடிப்படையில் நிர்ணயித்தீர்கள் ? உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி
வருமான சான்றிதழை தாசில்தாரிடம் பெற வேண்டிய நிலையில் எதன் அடிப்படையில் அவர் வழங்குவார் என உச்சநீதிமன்றம் சரமாறி கேள்வியெழுப்பியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ள நிலையில் பெருநகரங்களுக்கும், சிறுநகரங்களுக்கும் எப்படி ஒரே வருமான வரம்பை நிர்ணயித்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டுல் 8 லட்சம் ரூபாயை வரம்பாக நிர்ணயித்தது தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீட் மருத்துவபடிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% ஆகியவற்றை இந்த ஆண்டு செயல்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 48 மணிநேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு அடுத்த நாளே குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கான இடஒதுக்கீட்டின் கீழ் வராத பொதுப்பிரிவினர் EWSக்கான 10% இட ஒதுக்கீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 1000 சதுர அடிக்கு குறைவான சொந்த வீடு இருக்கலாம். 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை பெற வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும்போது நிர்ணயிக்கபடும் 8 லட்சம் ரூபாய்க்கான வரம்புகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா?, அதனை எப்படி நிர்ணயித்தீர்கள்? குறிப்பாக மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் 8 லட்சம் ரூபாய்க்கும் உபி போன்ற மாநிலங்களில் இருக்கும் பின்தங்கிய கிராமங்களில் பெறப்படும் வருமானத்துக்கும் வித்தியாசம் உள்ளது. பெருநகரங்களை ஒப்பிடும்போது 8 லட்சம் ரூபாய் என்பது கிராமங்களில் மிகப்பெரிய தொகை. அப்படி இருக்கையில் ஒரே விதமான வருமான வரம்பாக 8 லட்சம் ரூபாயை நிர்ணயித்தது எப்படி? என நீதிபதி கேள்வியெழுப்பினார். மேலும் வருமான சான்றிதழை தாசில்தாரிடம் பெற வேண்டிய நிலையில் எதன் அடிப்படையில் அவர் வழங்குவார் என உச்சநீதிமன்றம் சரமாறி கேள்வியெழுப்பியுள்ளது.
இதுதொடர்பான ஆவணங்கள் இருப்பின் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: