Cauvery Water Issue: அவசரமாக கூடும் காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள் குழு- தண்ணீர் கிடைக்குமா?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற உள்ளது.
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான, 14 பேர் அடங்கிய தமிழக எம்.பிக்கள் குழு இன்று மத்திய நீர்வள அமைச்சரை சந்திக்க உள்ளது.
காவிரி நீர் விவகாரம்:
டெல்டா விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது.
கருத்து மோதல்:
மேலும் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. இதனிடையே, கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது,
அவசர ஆலோசனைக் கூட்டம்:
இந்த நிலையில் தான், காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசுசார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் மாநில விவசாயிகளின் நிலை குறித்தும், காவிரி நீரை பெறுவதில் தமிழகத்திற்கு உள்ள உரிமை குறித்தும் எடுத்துரைப்பார்கள் என கூறப்படுகிறது. அதன்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரும்போது, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பக் கூடும். எனவே, அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை இன்று ஆணையம் அவசரமாக கூட இருக்கிறது.
தமிழக எம்.பிக்கள் குழு:
இதனிடையே, தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் இன்று மாலை மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளனர். அப்போது, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எடுத்துரைத்து, காவிரியில் இருந்து தமிழகத்திற்கான நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த உள்ளனர். இந்த குழுவில் டி.ஆர்.பாலு (திமுக), எஸ்.ஜோதிமணி (காங்கிரஸ்). மு.தம்பிதுரை, என்.சந்திரசேகரன் (அதிமுக), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராசன் (மார்க்சிஸ்ட்), வைகோ (மதிமுக). தொல். திருமாவளவன்(விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக). ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகிய 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.