`நாட்டின் தற்போதைய சூழல் அச்சம் தருகிறது!’ - பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பேச்சு!
நாட்டின் தற்போதைய சூழல் தொடர்பாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மக்கள் அனைவரும் ஒற்றுமையைப் பாதுகாக்க இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழல் தொடர்பாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது மக்கள் அனைவரும் ஒற்றுமையைப் பாதுகாக்க இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் மக்கள் மத்தியில் மத அடிப்படையிலான பிரிவினைகள் ஏற்படக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
கொல்கத்தாவின் சாய் லேக் பகுதியில் அமர்த்தியா ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமர்த்தியா சென், `நான் எதுகுறித்தாவது அச்சத்தில் இருக்கிறேனா என யாரேனும் கேட்டால், நான் `ஆம்’ என்று தான் பதில் தருவேன். தற்போது அச்சப்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றன. நம் நாட்டின் தற்போதைய சூழலே இந்த அச்சத்திற்கான காரணம். நம் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். வரலாற்று ரீதியாக அனைவரையும் சகிப்புத்தன்மையோடு ஏற்றுக் கொண்ட நாட்டில் பிரிவினைகளை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் தன்னுடைய சீரிய பணிக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தொடர்ந்து இந்தியா வெறும் இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமான நாடு இல்லை எனக் கூறியுள்ளதோடு, நாட்டின் பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Nobel laureate Dr #AmartyaSen :
— Supriya Bhardwaj (@Supriya23bh) July 1, 2022
Biggest Crisis that India is facing today is the possible Collapse of the Indian nation pic.twitter.com/Mq1eIM8rNn
`இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு அல்ல.. முஸ்லிம்கள் மட்டுமே இந்தியாவை உருவாக்கி விட முடியாது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ எனப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் சகிப்புத் தன்மையைப் போற்றும் கலாச்சாரம் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இருந்ததாகவும், யூதர்கள், கிறித்துவர்கள், பார்சிக்கள் முதலானோர் இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கைக் குறிக்கும் விதமாகப் பேசியுள்ள பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், `இந்திய நீதித்துறை பிரிவினையின் ஆபத்தை உணராமல் செயல்படுவது அச்சம் தருவதாக இருக்கிறது.. பாதுகாப்பான எதிர்காலத்திற்கு நீதித்துறை, சட்டமன்றங்கள், அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பணியாற்ற வேண்டும்.. ஆனால் இது இந்தியாவில் நடைபெறவில்லை. மேலும் மக்களை சிறையில் தள்ள பிரிட்டிஷ் காலனி காலத்தின் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன’ எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்