"பிழைக்க முடியாம போகலாம் குழந்தைய பாத்துக்க" - வீர மரணம் அடைவதற்கு முன்பு மனைவியிடம் டிஎஸ்பி உருக்கம்
உயிரிழப்பதற்கு முன்பு ஹுமாயூன் பட் தனது மனைவி பாத்திமாவிடம் வீடியோ கால் செய்து பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் அவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ராணுவ அதிகாரிகள் இருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஹுமாயூன் பட் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டின்போது கொல்லப்பட்டனர். காணாமல் போன மூன்றாவது ராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
வீர மரணம் அடைவதற்கு முன்பு மனைவியிடம் டிஎஸ்பி உருக்கம்:
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது. பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட டி.எஸ்.பி ஹுமாயூன் பட்டுக்கு கடந்தாண்டுதான் திருமணம் நடந்துள்ளது. 29 நாள்களுக்கு முன்புதான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
உயிரிழப்பதற்கு முன்பு ஹுமாயூன் பட் தனது மனைவி பாத்திமாவிடம் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது, தனது ஒரு மாத குழந்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "என்னால் உயிர் பிழைக்க முடியாது என நினைக்கிறேன். நான் உயிரிழந்தால் பையனை கவனித்து கொள்" என மனைவியிடம் பேசியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்னின்று தலைமை தாங்கி நடத்துபவர் ஹுமாயூன் பட். அனந்த்நாக்கின் அடர்ந்த கோகர்நாக் காடுகளில், பாதுகாப்பாக மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது அவர் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளார். அப்போது, பயங்கரவாதிகள் அவரை மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
முதலாம் ஆண்டு திருமண நாளுக்கு 15 நாள்கள் கூட இல்லாத நிலையில் உயிரிழப்பு:
ஹுமாயூன் பட் தாக்கப்பட்டபோது, ஹெலிகாப்டர் மீட்புக் குழுவினர் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. இதனால், நேற்று முன்தினம் அதிகாலையில் ரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்தார். முதலாம் ஆண்டு திருமண நாளுக்கு 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், 29 நாள் கைக்குழந்தையையும் மனைவியையும் தனது ஃபோன் திரையில் பார்த்து கொண்டே அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஹுமாயூன் பட், ஸ்ரீநகரின் பர்ன் ஹால் பள்ளியில் கல்வி கற்றார். வடக்கு காஷ்மீரில் உள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். பெற்றோர், சகோதரர், மனைவி, ஒரு மாதம் கூட ஆகாத குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஜம்மு, காஷ்மீர் காவல்துறையின் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரல் குலாம் ஹசன் பட்டின் மகன் ஹுமாயூன் பட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்.. இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் சல்யூட் அடித்த 6 வயது மகன்