சபரிமலை ஐயப்பன் கோயில் அன்னதானத்தில் அதிரடி மாற்றம்! பக்தர்களுக்கு இனி கேரள 'சத்யா' விருந்து!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்காக வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தில், புலாவ் மற்றும் சாம்பார் சாதம் நிறுத்தப்படுகிறது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்காக வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தில், புலாவ் மற்றும் சாம்பார் சாதம் நிறுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக, வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய ‘கேரள சத்யா’ விருந்து வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கடினமான மலைப்பாதையில் நடந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இனி மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. இதுவரை அன்னதானத்தில் வழங்கப்பட்டு வந்த வழக்கமான புலாவ், சாம்பார் சாதத்திற்குப் பதிலாக, இனி வாழை இலையில் பரிமாறப்படும் கேரளாவின் பாரம்பரிய ‘சத்யா’ (Sadhya) விருந்து வழங்கப்பட உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மலையாளத்தில் 'சத்யா' என்றால் 'விருந்து' (Banquet) என்று பொருள். இது வெறும் உணவு மட்டுமல்ல, கேரளாவின் கலாச்சார அடையாளம். தலை வாழையிலையில் பரிமாறப்படும் இந்த விருந்தில் சுமார் 9 விதமான நிலைகளில் (Courses) உணவு பரிமாறப்படும். இதில் 2 டஜனுக்கும் அதிகமான உணவு வகைகள் இடம்பெறலாம். இதில் முக்கியமாக நேந்திரம் சிப்ஸ், சர்க்கரை வரட்டி, அப்பளம், இஞ்சிப்புளி, தோரன், மெழுக்குபுரட்டி, காளன், ஓலன், அவியல், நெய்யுடன் கூடிய பருப்பு, சாம்பார், எரிசேரி, ரசம், புளிசேரி, கிச்சடி, பச்சடி, மோர், ஊறுகாய் வகைகள் மற்றும் தேங்காய் சட்னி ஆகியவை அடங்கும். இறுதியாகத் தித்திக்கும் பாயசத்துடன் இந்த விருந்து நிறைவடையும்.
இதுகுறித்துத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே. ஜெயகுமார் பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் அன்னதானத்தில் இதுவரை புலாவ், சாம்பார் வழங்கப்பட்டு வந்தது. இது பக்தர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று கருதினோம். எனவே, அதற்குப் பதிலாக பாயசம், அப்பளம், கூட்டுக்காய்களுடன் கூடிய முழுமையான 'கேரள சத்யா' உணவை வழங்க வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அன்னதானத்திற்கான பணம் தேவசம் போர்டுக்கு சொந்தமானது அல்ல. ஐயப்ப பக்தர்களுக்கு நல்ல உணவு வழங்க வேண்டும் என்பதற்காகப் பக்தர்கள் வாரியத்திடம் ஒப்படைத்த நிதி அது. எனவே, அன்னதானத்தின் தரத்தை உறுதி செய்வது வாரியத்தின் கடமை என்றார்.
இந்த முடிவு குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன் அல்லது வியாழக்கிழமை (இன்றோ அல்லது நாளையோ) முதல் இந்த புதிய உணவு முறை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சபரிமலை வளர்ச்சித் திட்டங்கள் (Masterplan) குறித்தும், அடுத்த ஆண்டுக்கான யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்க டிசம்பர் 18-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெறும். 2026-ம் ஆண்டுக்கான யாத்திரை சீசன் ஏற்பாடுகள் பிப்ரவரி 2026-லேயே தொடங்கப்படும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார். தற்போதைய சீசனில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும், இப்போது அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.





















