Owaisi : "பாபர் மசூதியை இழந்ததே போதும்.." : காசி மசூதி விவகாரத்தில் ஓவைஸி உருக்கம்..
பாபர் மசூதியை இழந்ததே போதும். இன்னொரு மசூதியையும் இழக்க முடியாது என்று உருக்கமாகப் பேசியுள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி.
பாபர் மசூதியை இழந்ததே போதும். இன்னொரு மசூதியையும் இழக்க முடியாது என்று உருக்கமாகப் பேசியுள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உலகப்புகழ் பெற்ற காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே இருக்கிறது ஞானவாபி மசூதி.
முகலாய மன்னா் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதா் கோயிலின் பகுதியை அகற்றி மசூதியைக் கட்டினார் என்று சில வரலாற்று குறிப்புகளில் கூறப்படுகிறது. இதை ஒட்டி, முகாலயர் காலத்தில் காசி விசுவநாதர் கோயிலின் ஒருபகுதியை ஆக்கிரமித்தே ஞானவாபி மசூதியைக் கட்டினார்கள் என்று விஜய சங்கர் ரஸ்தோகி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டானது, மனுதாரர் சொல்வது போல் ஆக்கிரமிப்பு நிலத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆராய்ச்சித் துறைக்கு உத்தரவிட்டது. ஆய்வுக் குழுவிம் சிறுபான்மையினர் பிரதிநிதிகள் இருவர் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழிபாட்டிடத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் நுழைந்து ஆய்வு செய்ய இந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றும், முதலில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார் அல்லது ஜியோ ரேடியாலஜி முறையில் ஆய்வு செய்து பார்த்தபிறகு தேவை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் நான்கு சதுர அடிக்கு மிகாத இடத்தில் அகழ்வாய்வு செய்து பார்க்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி பேசும்போது, இது அப்பட்டமான சட்ட விதிமீறல். 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான வழிபாட்டுத் தலத்தில் அதன் உட்பிரிவினரோ அல்லது மாற்று மதத்தினரோ ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க மசூதியை ஆய்வு செய்து அபகரிக்க நினைப்பது நியாயமாகுமா? ஏற்கெனவே பாபர் மசூதியை இழந்துவிட்டோம். ஒரு மசூதியை இழந்ததே போதுமானது. ஞானவாபி மசூதியை இழக்கக் கூடாது. பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி பார்த்தால் கூட உள்ளூர் நீதிமன்றம் ஆய்வு செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது சட்ட விரோதமானது. இந்த விஷயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
யோகி ஆதித்யநாத் அரசு, இந்த வழக்கை முன்னெடுத்தவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் 1991 சட்டத்தின்படி மத வழிபாட்டுத் தலத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் கருதினால் மூன்றாண்டுகள் வரை தண்டனை அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.