Domestic Air Passengers : ஒரே நாளில் 4.50 லட்சம் பயணிகள்.. உச்சம் தொட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து.. இதோ விவரம்..
நேற்று, ஒரே நாளில், 4 லட்சத்து 56 ஆயிரத்து 82 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து உச்சம் தொட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில், 4 லட்சத்து 56 ஆயிரத்து 82 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணை முட்டும் அளவுக்கு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:
விண்ணை முட்டும் அளவுக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நாட்டின் செழுமை அதிகரித்திருப்பதை காட்டுகிறது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த சில மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய சராசரியை மிஞ்சியது.
நேற்று, 2,978 விமானங்களில் மொத்தம் 4,56,082 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. கொரோனாவுக்கு முன், சராசரி தினசரி உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரபத்து 579 ஆக பதிவானது.
சாதனைகளை படைத்து வரும் விமான போக்குவரத்துத் துறை:
"நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது" என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், உள்நாட்டு விமானங்கள் மூலம் 128.93 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். இது கடந்தாண்டு மார்ச் மாதத்தை காட்டிலும், 21.4 சதவிகிதம் அதிகம். மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 375.04 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
भारतीय नागर विमानन क्षेत्र नित नए कीर्तिमान स्थापित कर रहा है - कोविड-उपरांत, आसमान छूती घरेलू हवाई यात्रियों की संख्या भारत के बढ़ते विकास और समृद्धि का संकेत है। pic.twitter.com/Iobij1asnk
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) May 1, 2023
உள்நாட்டு விமானப் போக்குவரத்து, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் வகையில், கடந்த நிதியாண்டில், பயணியரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஐ.சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது. ஐ.சி.ஆர்.ஏ., எனப்படும் முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்து பயணியர் குறித்த தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் சுப்ரியோ பானர்ஜி கூறுகையில், "உள்நாட்டு விமானப் போக்குவரத்தில், பயணியரின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 60 சதவீதம் உயர்ந்து, 13.60 கோடி என்ற அளவில் உள்ளது.
இருப்பினும், இந்த எண்ணிக்கை, தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த 14.15 கோடி என்ற எண்ணிக்கையைவிட, 4 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.