Nagpur Shocker : ஆபரேஷன் தியேட்டரில் டீ கொடுக்காததால் டாக்டர் செய்த சம்பவம்.. நோயாளிகள் அதிர்ச்சி
நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நடைபெற்றுள்ள சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நடைபெற்றுள்ள சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
என்னதான் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து விட்ட போதிலும், இன்னும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கோடிக்கணக்கான மக்களிடம் உள்ளது. மாநில, மத்திய அரசும் மருத்துவ வசதியை கிராம புற மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்றவாறு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வரை பல்வேறு வகையிலான மருத்துவமனைகள் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் சிறப்பான மருத்துவம் கிடைத்தாலும், அது சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. மருத்துவர்களின் அலட்சியம், பணியாளர்களின் சரியான கவனிப்பின்மை, மருத்துவமனையின் சுகாதாரமற்ற தன்மை போன்றவை இன்னும் சரி செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆங்காங்கே இதுதொடர்பாக எழும் புகார்களும் அரசால் சரிசெய்யப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி அங்குள்ள மௌடா பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் 8 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அந்த 8 பேரும் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களில் நான்கு பெண்களின் அறுவை சிகிச்சை முதல்கட்டமாக நடைபெற்றுள்ளது.
அப்போது ஆபரேஷன் செய்த மருத்துவர் தனக்கு டீ வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் பணியாளர்கள் டீ கொண்டு வர தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அம்மருத்துவர் உடனடியான ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த சமயத்தில் மீதமுள்ள 4 பெண்களும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியான இந்த சம்பவம் தொடர்பாக 4 பெண்களின் குடும்பத்தினரும் மாவட்ட மருத்துவ அலுவலரைத் தொடர்பு கொண்டு பணி மருத்துவரின் அலட்சியம் குறித்து புகாரளித்தனர். உடனடியாக வேறொரு மருத்துவரை அனுப்பி வைத்து அப்பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட மருத்துவ அலுவலர் சௌமியா சர்மா, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.