(Source: ECI/ABP News/ABP Majha)
Parliament Opening Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா.. திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என, அக்கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அறிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் திமுக பங்கேற்காது என, அக்கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அறிவித்துள்ளார். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில், திமுகவும் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம்:
டெல்லியில் அமைந்துள்ள தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் 96 ஆண்டுகள் பழமையானது. இதனால் புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்ய, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி புதிய நாடாளுமன்றம் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதையடுத்து துரிதகதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் தற்போது முழுமையாக தயாராகியுள்ளது. இந்த கட்டடம் 64 ஆயிரத்து 500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், இந்த கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டத்தை திறந்து வைக்கிறார். இதற்கான அழைப்பிதழ்களை முதலமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:
இதனிடையே, மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதோடு, நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கின. அதோடு, நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ள வரும் 28ம் தேதி என்பது சாவர்க்கரின் பிறந்தநாள் ஆகும். அந்த நாளில் புதிய கட்டடத்தை திறப்பதன் மூலம், என்ன விதமான கருத்தை வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினர். ஆனாலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்ற, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு:
இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திமுக எம்பி திருச்சி சிவா அறிவித்துள்ளார். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மொத்தமாக 19 கட்சிகள் இதுவரை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.