உணவு டெலிவரி டூ ஐடி ஊழியர்.. பார்ட் டைம் வேலையும் படிப்பும்! பெங்களூர் இளைஞரின் கதை!
”ஆரம்பத்தில் இந்த வேலை பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது. ஆனால் எனது பங்களிப்பை குடும்பத்திற்கு கொடுக்க விரும்பினேன்.”
இணையத்தில் பகிரப்படும் சிலரின் கதைகள் சோர்ந்து கிடக்கும் சிலரின் வாழ்க்கைக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும் . அப்படித்தான் ஷேக் அப்துல் சதார் என்னும் இளைஞரின் கதையும். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஷேக் ஒரு டெலிவெரி பாயாக இருந்து தற்போது பெங்களூர் ஐடி கம்பெனியில் பொறியாளராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இது குறித்து வேலை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட linkedin வலைத்தள பக்கத்தில் அவரே பகிர்ந்திருக்கிறார்.
படிக்கவும் உழைக்கனும் !
ஷேக் பகிர்ந்த அந்த பதிவில் ”நான் கனவுகளை சுமந்துக்கொண்டு வேலை செய்த ஒரு டெலிவரி பாய். கல்லூரி படிப்பை முடித்ததில் இருந்து Ola, Swiggy, Uber, Rapido, Zomato என அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரிந்தேன், எனது அப்பா ஒரு ஒப்பந்த ஊழியர். அவரின் வருமானம் எங்களுக்கு சரியாக இருந்தது. மேற்க்கொண்டு படிக்க ஆசைப்பட்ட பொழுது , இந்த வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் இந்த வேலை பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது. ஆனால் எனது பங்களிப்பை குடும்பத்திற்கு கொடுக்க விரும்பினேன். ஒரு டெலிவரி பாயாக நான் நிறைய அனுபவ பாடங்களை கற்றுக்கொண்டேன்“ என்றார்.
இப்படித்தான் coding கற்றேன் :
ஷேக் ஒரு நாள் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது , அவர் சாதாரண அறிவுரையாக கோடிங் படிக்கச்சொல்லியிருக்கிறார். அதனை சீரியசாக எடுத்துக்கொண்ட ஷேக் அதன் மீது அதிக ஆர்வம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தினமும் காலை நேரங்களை coding கற்றுக்கொள்ளவும் , மாலை 6:00 PM முதல் இரவு 12:00 AM வரை டெலிவரி பாயாகவும் வேலை செய்திருக்கிறார்.அந்த பணத்தின் மூலம் தனது செலவுகள் , கோடிங் படிப்பதற்கான செலவுகள் அவ்வபோது வீட்டின் சிறு சிறு தேவைகளையும் பூர்த்தி செய்து வந்துள்ளார்.
கடனாளி டு கார்ப்ரேட் எம்ப்லாயி!
தனது டெலிவரி பாய் வேலை , தனக்கு மற்றவர்களுடன் உரையாடுவதற்கான ஆங்கில தகுதியை உயர்த்த வாய்ப்பாக இருந்தது என தெரிவிக்கும் ஷேக்கிற்கு தற்போது.Probe Information Services Pvt Ltd (Probe42) என்னும் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. “ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவு செய்த நிலையில் இருந்து , தற்போது எனது பெற்றோரின் கடனை அடைக்கும் நிலைக்கு “ உயர்ந்துள்ளேன் என பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்து!
இரண்டு நாட்களுக்கு முன்னதாக இவர் ஷேர் செய்த இந்த பதிவு தற்போது 7 ஆயிரத்திற்கு அதிகமான லிங்ட் இன் பயனாளர்களை சென்றடைந்துள்ளது.ஷேக் அப்துல் சதார் வாழ்க்கை பதிவு பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. பலரும் ஷேக் அப்துல்லிற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.