என்னது புடவைக்கு தடையா..? நோ சொன்ன டெல்லி உணவகம்; கொதிக்கும் நெட்டிசன்கள்..
சேலை கட்டிவந்த பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ளது மிகவும் பிரபலமான நட்சத்திர அந்தஸ்து பெற்ற அக்கிலா உணவகம்.
சேலை கட்டிவந்த பெண்ணுக்கு உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ளது மிகவும் பிரபலமான நட்சத்திர அந்தஸ்து பெற்ற அக்கிலா உணவகம்.
இந்த உணவகத்திற்கு சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் அது தொடர்பாக அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி தேதி ஏதுமில்லை. இருப்பினும், இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் சேலை அணிந்துவரும் நடுத்தர வயது கொண்ட பெண்ணை உணவக ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அவர், அந்தப் பெண்ணிடம், சேலை அணிந்து வந்தால் அனுமதியில்லை எனக் கூறுகிறார். உடனே கோபத்தில் அந்த நடுத்தர வயது பெண்மணி எங்கே சேலை அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் எனக் கூறுகிறார். அதற்கு அந்த பெண் ஊழியர், மேடம், நாங்கள் ஸ்மார்ட்டான கேசுவல் உடைகளை மட்டுமே அனுமதிக்கிறோ எனக் கூறுகிறார். இது மட்டும்தான் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இதனை தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ட்விட்டராட்டி ஒருவர், அக்கிலா உணவகத்தில் சேலையுடன் வந்தால் அனுமதியில்லையாம்! அப்படியென்றால் சேலை அழகான நேர்த்தியான ஆடையில்லையா? ஸ்மார்ட் ஆடை என்றால் என்னவென்று விளக்கினால் நன்றாக இருக்கும் என்ரு கூறி அமைச்சர்கள் அமித் ஷா, ஹர்தீப் புரி ஆகியோரை டேக் செய்துள்ளார்.
அதேபோல், எழுத்தாளர் ஷெஃபாலி வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "புடவை ஸ்மார்ட் உடைகள் அல்ல என்று யார் தீர்மானிப்பது? நான் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் புடவை அணிந்திருக்கிறேன். யாரும் என்னைத் தடுக்கவில்லை, அக்கிலா உணவகம் புடவை ஸ்மார்ட் ஆடை இல்லை என்று முடிவு செய்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பலரும் தாங்கள் சேலை அணிந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற உணவகங்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தெளிவான கொள்கை வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் டெல்லியில் இன்னொரு உணவகத்தில் இதேபோன்று ஒரு பெண்ணுக்கு சேலை அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகி சில காலம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தியப் பெண்களின் ஆடையாக சேலை உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்திய உணவகங்களே பெண்கள் சேலை அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ளாத போக்கு ஒருவித வெறுப்புணர்வே என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.