AAP MP Custody: ஆம் ஆத்மிக்கு நெருக்கடி.. சிசோடியாவை தொடர்ந்து எம்பி சஞ்சய் சிங்குக்கு ED காவல்
டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
![AAP MP Custody: ஆம் ஆத்மிக்கு நெருக்கடி.. சிசோடியாவை தொடர்ந்து எம்பி சஞ்சய் சிங்குக்கு ED காவல் Delhi Court sends Aam Aadmi Party MP Sanjay Singh to remand till 10 October in Delhi excise policy case AAP MP Custody: ஆம் ஆத்மிக்கு நெருக்கடி.. சிசோடியாவை தொடர்ந்து எம்பி சஞ்சய் சிங்குக்கு ED காவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/865fd2eb0c90e2d9556dfe0ebfa7da271696511791833729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.
சஞ்சய் சிங்குக்கு அமலாக்கத்துறை காவல்:
இந்த நிலையில், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு தொழிலதிபர் சஞ்சய் சிங்குக்கு 3 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் டெல்லி அரசின் மதுபான கொள்கைக்காக அவருக்கு இந்த பணம் தரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கததுறை வாதிட்டது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய டெல்லி தொழிலதிபர் தினேஷ் அரோராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.
சஞ்சய் சிங்கின் வீட்டில் இருந்து ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டுக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் பரபர வாதம்:
சஞ்சய் சிங்கின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், "239 சோதனைகளை நடத்தியதாக அமலாக்கத்துறை கூறுகிறது. 239 சோதனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் சஞ்சய் சிங்கை விசாரிக்க போவதாக அமலாக்கத்துறை கூறுகிறதா?" என கேள்வி எழுப்பியது. இரு தரப்பு வாதத்தை கேட்ட டெல்லி நீதிமன்றம், அவருக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை காவல் விதித்து உத்தரவிட்டது.
டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுதான், சிறையில் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், இவரை சிபிஐ கைது செய்தது. இதை தொடர்ந்து, இதே வழக்கில் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சஞ்சய் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த ஒரு வருடமாக மதுபான ஊழல் பற்றி கூக்குரல் கேட்டு வருகிறோம். 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை. 'ஊழல்' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நிறைய விசாரணை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை.
சஞ்சய் சிங்கின் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை. தேர்தல்கள் வரவிருக்கின்றன. அவர்கள் (பாஜக) தோற்றுப் போவதாக உணர்கிறார்கள். எனவே இது தோல்வியடைய உள்ள தரப்பின் கடைசி முயற்சியாகத் தோன்றுகிறது" என்றார்.
ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளித்துள்ள பாஜக, "டெல்லி மக்களை ஆம் ஆத்மி கொள்ளையடித்துள்ளது. இந்த மதுபான கொள்கையின் மூலம் கோடிகளை ஈட்டியுள்ளார்கள்" என விமர்சித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)