Brij Bhushan: பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்குக்கு ஜாமீன்..அதிர்ச்சி தந்த நீதிமன்றம்
உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறை, பிரிஜ் பூஷன் சிங்கின் ஜாமீன் கோரிக்கையை எதிர்க்கவில்லை.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் உதவிச் செயலாளர் வினோத் தோமர் சிங் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறை, பிரிஜ் பூஷன் சிங்கின் ஜாமீன் கோரிக்கையை எதிர்க்காததால் டெல்லியின் நீதிமன்றம் இன்று மாலை 4 மணி வரை தீர்ப்பை ஒத்திவைத்தது.
மல்யுத்த வீரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செல்வாக்கு மிக்க நபராக உள்ள பிரிஜ் பூஷன், வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கலாம் என நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தார். சாட்சிகளையோ பாதிக்கப்பட்டவர்களையோ அணுக கூடாது என நீதிமன்றம் பிரிஜ் பூஷனை சிங்கிடம் அறிவுறுத்த வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்த நிலையில், டெல்லி காவல்துறை தொடர் விசாரணை மேற்கொண்டது. இதை தொடர்ந்து, இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 354, 354A, 354D ஆகிய பிரிவுகளில் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், 354 பிரிவு என்பது பெண்ணை மானபங்கம் செய்ததற்காக ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்படும். இதில், தண்டனை உறுதியானால் ஐந்து ஆண்டுகள் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 354A என்பது பாலியல் துன்புறுத்தல் தொடர்பானது. இதில், ஜாமீன் வழங்கப்படும். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளி மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். குறிப்பிட்ட நபரை அச்சுறுத்தும் விதமாக பின்தொடர்ந்தால் பிரிவு 354D பதிவு செய்யப்படும். இதில், ஜாமீன் வழங்கப்படலாம். குற்றம் நிரூபணமானால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
ஆறு மல்யுத்த வீரர்களின் புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொன்று பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, பின்னர் வழக்கை வாபஸ் பெற்று கொண்டதால் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டது.
விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கை டெல்லி காவல்துறை கைது செய்யாமல் இருந்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. இந்த சூழலில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.