பொய் சாதி சான்றிதழ் காட்டி அரசு பணி பெற்ற விவகாரம்..தலித் மக்கள் நிர்வாண போராட்டம்..சத்தீஸ்கரில் பரபரப்பு
போராட்டத்தின்போது சிலர் நிர்வாணமாக ஓடியது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் பட்டியலின, பழங்குடியின பிரிவை சேர்ந்த சிலர் இன்று நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. போலி சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தீஸ்கரை உலுக்கிய நிர்வாண போராட்டம்:
போராட்டத்தின்போது சிலர் நிர்வாணமாக ஓடியது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாணமாக போராட்டம் நடத்திய 12க்கும் மேற்பட்டவர்கள் மாநில சட்டப் பேரவையை நோக்கி பேரணியாக சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
போலி சாதிச் சான்றிதழைப் பயன்படுத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாநில சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கி சிலர் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ராய்பூர் நகர மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் கூறுகையில், "பாண்டிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அமா சியோனியின் திருப்பம் அருகே ஆபாசமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்" என்றார்.
அடுத்து என்ன?
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநில அரசின் விசாரணைக் குழு போலி ஜாதிச் சான்றிதழ் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தியதில், 267 அரசு ஊழியர்கள் போலி எஸ்சி/எஸ்டி சான்றிதழ்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு முன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்கள் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை. எனவே, நாங்கள் இப்போது நிர்வாண போராட்டம் நடத்துகிறோம்.
போலி ஜாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களைக் கைது செய்து, அவர்கள் சம்பாதித்த சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இதை விட தீவிரமான போராட்டங்களை நடத்துவோம்" என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிர்வாணமாக ஊர்வலம் சென்றதையும், சாலையில் கோஷம் எழுப்புவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏன் என்றால், சத்தீஸ்கர் மாநிலத்தில் 43 விழுக்காட்டினர் பட்டியலின, பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள். தேர்தலில் வெற்றி பெற அவர்களின் ஆதரவு மிக முக்கியம். எனவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.