அவருக்கு என்ன தெரியும்? தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக சி.டி ரவிக்கு ஒவைஸி காட்டம்..
உலக அரசியல் பற்றி சி.டி.ரவிக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி.
உலக அரசியல் பற்றி சி.டி.ரவிக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி.
ஓவைஸியின் ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியும் தலிபான்களும் ஒன்றுதான் ஒப்புமைப்படுத்திப் பேசிய பாஜக தேசியச் செயலர் சி.டி.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.டி.ரவி பேசியதாவது:
முன்னதாக நேற்று கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசியச் செயலர் சி.டி.ரவி, ஓவைஸியின் ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) மற்றும் எஸ்டிபிஐ (SDPI) ஆகியன தலிபான் மனநிலை கொண்டவை. அதிலும் ஏஐஎம்ஐஎம் கர்நாடகாவின் தலிபான் என்றே கூறலாம். கர்நாடகாவின் காலாபுராகி பகுதி மக்கள் தலிபான் கொள்கையை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று பேசினார். காலாபுராகி மாநகராட்சித் தேர்தல் நாளை மறுநாள் (செப்டம்பர் 3 ஆம் தேதி) நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 6ல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சித் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. அதனை ஒட்டியே சி.டி.ரவி இவ்வாறு பேசியிருக்கிறார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த சி.டி.ரவி அம்மாநில அமைச்சராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர், அண்மையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஓவைஸி பதிலடி:
சி.டி.ரவியின் பேச்சு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓவைஸி, "சி.டி.ரவி ஒரு சிறு குழந்தை. அவருக்கு சர்வதேச அரசியல் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாஜக, உய்பா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலிபான்களை தடை செய்ய முடியுமா? உலகிலேயே இதுவரை இரண்டு தேசங்கள் தான் தலிபான்களை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கவில்லை. அதில் ஒன்று இந்தியா. இன்னொன்று பாகிஸ்தான். நான் இதற்கு முன்னர் பலமுறையும் கூட (UAPA) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலிபான்களை தடை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட இந்தக் கோரிக்கையை நான் பலமுறை முன்வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவில் அரசியல் கட்சிகள் ஒருவொருக்கொருவர் சாடிக்கொள்ள தலிபான்கள் மனப்பாண்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அண்மையில், ஹரியாணா மாநில விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தது சிவசேனா. அதில் இந்தத் தாக்குதல், தேசத்திற்கே அவமானமாகும், இதுபோன்ற தாக்குதல்கள், தலிபான்களின் மனநிலையாக உள்ளது என மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்திருந்தார். அதற்கு முன்னதாக பாஜக, சிவசேனாவை தலிபான்களின் மனநிலையுடன் செயல்படுவதாக விமர்சித்திருந்தது. பால் தாக்கரே நினைவிடம் தொடர்பான சர்ச்சையில் பாஜக சிவசேனாவை இவ்வாறு விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.