Covid 19 Vaccination: ஒரே நாளில் இந்தியாவில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி!
இன்று மதியம் 1:30 மணி நிலவரப்படி ஒரு நாளில் ஒரு கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 கோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை கோவின் ஆப் இணையதளம் வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 1:30 மணி நிலவரப்படி ஒரு நாளில் ஒரு கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது. இதுநாள் வரை 78,72,49,174 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 59,19,69,261 பேருக்கு முதல் டோஸும் 19,52,79,913 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,09,686 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 65,88,69,395 தடுப்பூசிக்கான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 18-44 வயதுக்கு உட்பட்டவர்களில் 38,70,02,469 பேரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27,18,66,926 பேரும் தடுப்பூசிக்காகப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 71-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டிருந்தது பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு சேவா சமர்பன் அபியான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 7 2021 வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாளை நமது அன்புக்குரிய பிரதமருக்குப் பிறந்தநாள். அதனால், நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தடுப்பூசி செலுத்தவைத்து நாம் தடுப்பூசி சேவை செய்வோமாக. இது தான் நாம் பிரதமருக்கு வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு” என்று இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார். இதேபோல் பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக்கும் தடுப்பூசி திட்டத்துக்கு உதவி செய்வதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சிறப்பான வழியில் கொண்டாட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அரசியல் பயணம் 20 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டும் சேவா சமர்பன் அபியான் என்ற திட்டத்தின் கீழ் 20 நாட்கள் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையில்லா திண்டாட்ட நாளாக காங்கிரஸ் கடைபிடிக்கிறது. இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தெரிவிக்கையில், “வேலையில்லா திண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் 32 லட்சம் பேர் தங்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். அதே நேரம் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களான பெரு முதலாளிகளின் செல்வம் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பல மடங்கு பெருகியுள்ளது. பகோடா பொருளாதாரம் (PAKODANOMICS) பேசியது போதும். இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலையை மத்திய அரசு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் அன்று நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் துயரங்களையும், வேலையில்லா திண்டாட்டத்தால் நாடு எதிர்கொண்டுள்ள அபாயங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த தேசிய இளைஞர் காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.