தடம் மாறும் ரயில்வே? 'ரிசர்வேஷன் செய்தும் ரயிலில் பயணிக்க முடியவில்லை..' பத்திரிகையாளரின் கசப்பான அனுபவம்
ரயிலில் பயணிக்க ரிசர்வேஷன் செய்திருந்த நிலையில் ரிசர்வேஷன் செய்யாத பலர் ஆக்கிரமத்திருந்ததால் ரயிலில் ஏற முடியாமல் பயணத்தை தவற விட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் முகமது இஸ்மாயில் என்பவர் ரயிலில் பயணிக்க ரிசர்வேஷன் செய்திருந்த நிலையில் தனக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
”இன்று எனக்கு கிடைத்த மிக மோசமான அனுபவம் இனி ரயிலில் பயணமே செய்யக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் இருந்து திண்டுக்கலுக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்கூட்டியே டிக்கெட் ரிசர்வ் செய்து, ரயில் வருவதற்கு சுமார் 30 நிமிடம் முன்பாகவே சென்று, ரயில் பெட்டி நிற்கும் இடத்திற்கு சரியாக சென்றும் கூட, இன்று ரயிலில் ஏற முடியவில்லை. காரணம் முன்பதிவு செய்யாத பலர், வழிகளை அடைத்து, உள்ளே செல்ல விடாமல் பாதையிலேயே அமர்ந்து விட்டனர்.
ரயிலில் ஏற முடியவில்லை
சுமார் 50 பேர் உள்ளே செல்ல முண்டியடித்த நிலையில், அதில் ஓரிருவர் மட்டுமே உள்ளே செல்ல முடிந்தது. வழக்கமாக 10 நிமிடம் நிற்க வேண்டிய ரயில், 2 நிமிடத்தில் திடீரென புறப்பட்டது. ஒரு தாய் தனது குழந்தையை உள்ளே திணித்து விட்டார். அவர் ஏறுவதற்கு முன்பே ரயில் புறப்பட்டது. பின்னர் குழந்தையை ஒடிச் சென்று வெளியே எடுத்து விட்டார். நான் எனது குடும்பத்தினர், லக்கேஜ்களுடன் இருந்ததால், என்னாலும் ஏற முடியவில்லை. இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், ரயிலுக்குள் இருந்த டிடிஆர், கொடியசைத்து, வழி அனுப்பி வைப்பவர்கள் என பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
வேடிக்கை பார்த்த காவலர்கள்:
ரயிலுக்குள் இருந்த டிடி ஆர் ஒருவரிடம் அவசர செயினை இழுத்து, வண்டியை நிறுத்துங்கள், ரிசர்வேசன் டிக்கெட் வைத்திருக்கிறேன் என சொல்லியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு வேளை அவருக்கு தமிழ் தெரியவில்லை என நினைக்கிறேன். அங்கிருந்த காவலருக்கும் தமிழ் தெரியவில்லை. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நான், ரயில்வே உயர் அதிகாரிகள் இங்கு வர வேண்டும், இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என காவலரிடம் கூற, அவர் பல நிமிடம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அடுத்த ரயிலில் ஏற்றிவிட ஏற்பாடு
ஒருவேளையாக ஒரு ஆர்பிஎஃப் உயர் அதிகாரி தொடர்புக்கு வந்தார். ரயிலில் உள்ள அன்ரிசர்வ் சீட்டுகளுக்கு ஏற்பத்தான் டிக்கெட் விற்க வேண்டும். ஆனால் இஷ்டத்துக்கு வழங்கி விடுகிறார்கள். டிக்கெட் வாங்கியவர்கள் இஷ்டத்துக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை கண்டுகொள்வதுமில்லை. ரயில் தாமதாக வந்ததால், உடனே புறப்பட்டுவிட்டது. நீங்கள் அடுத்த ரயிலில் செல்லுங்கள். இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. இணையதளம் மூலம் புகார் தெரிவியுங்கள். போராட்டம் நடத்தினால், உங்கள் மீது தான் வீணாக வழக்கு பதிவு செய்வார்கள் அடுத்த ரயிலில் உங்களை ஏற்றி விட ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
உறவினர்களை பார்க்க முடியாமல் ஏமாற்றம்
ரிசர்வேசன் செய்த டிக்கெட்டுக்கே இடம் கிடைக்கவில்லை, இனி அடுத்த ரயிலின் நிலை என்னவென்று தெரியாததால், அவருக்கு நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கே வந்துவிட்டேன். இந்த ரயிலில் செல்லாதது ஒரு வேளை உங்களுக்கு வேறு நன்மைகளை கூட தரலாம். அப்படி எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினார்.
ரம்ஜான் பெருநாளுக்கு பிறகு, இப்போது தான் ஊருக்குச் செல்ல இருந்தேன். சென்னையில் தான் ஈத் பெருநாள் கொண்டாட வேண்டும் என இறைவன் நாடியிருந்தால், அதை யாரால் தடுக்க முடியும் என நினைத்துக் கொண்டு, ஏமாற்றம் அடைந்த எனது குழந்தைகளுடன் சேர்ந்து, நானும் வீட்டுக்கே வந்து விட்டேன். ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் பயணம் செய்யும் ரயில்வே இவ்வளவு கேவலமாக நிர்வகிக்கப்படுவது அந்த நிர்வாகத்துக்கு பெரும் அவமானம்”. இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த வேதனை கலந்த பதிவானது ரயிலில் பயணிக்கும் பலரும் சந்திக்கும் பெரும் சிரமம் ஆகும். சமீபகாலமாக ரிசர்வேஷன் செய்த பெட்டிகளில் சாதாரண பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுத்த பயணிகளும், டிக்கெட்டே எடுக்காத பயணிகளும் அதிகளவில் ஆக்கிரமித்து கொள்வது ரிசர்வேஷன் செய்பவர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. இதற்கு விரைவில் தக்க தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.