Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்..
இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை பிரிட்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற இருக்கிறது.
![Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்.. Corona Vaccination Gap Row Immunologist Dr Shanmuganandhan reasons 12-16 week gap covishield vaccine dose Covishield Vaccine Dosage : 12-16 வாரத்துக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட்.. முறையானதா? தெரிந்துகொள்வோம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/9a9a2809ce5cae2e9e2c7b3a9f15af14_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இனி 12-16 வாரகால இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை பிரிட்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற இருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்பு அறிவிக்கப்பட்டது போலவே 4-6 வாரகால இடைவெளி தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஆனால் 12 வாரகால இடைவெளி அறிவிப்பு தடுப்பூசி தட்டுப்பாட்டை மறைக்கத்தான் எனவும் அவ்வளவு நீண்டகால இடைவெளி தேவையில்லை எனவும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நிபுணர்களிடமிருந்தே மறுப்புக்குரல்கள் எழுந்துவருகின்றன. ’கோவாக்சினுக்கு இவ்வாறுதான் 4-6 வாரகால இடைவெளி என அறிவித்தார்கள் ஆனால் அந்தத் தடுப்பூசியின் பரிசோதனை விதிமுறைகளின்படி 28 நாட்களுக்குள்ளேயே இரண்டாவது தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டிருந்தது’ என்கிறார்கள்.
ஆனால் அரசு சொல்லும் இந்த பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டம் என்ன?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் பிரிட்டன் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தை கொண்டுவந்தது அதன்படி இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கால அவகாசத்தை 12 வாரங்களாக நீட்டித்தது. கொரோனாவுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்பை எல்லோருக்கும் உறுதிசெய்யவும் முதல் டோஸ் தடுப்பூசி எல்லோருக்கும் கிடைப்பதை அதிகரிக்கவுமே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி சுமார் 70 சதவிகிதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் பிரிட்டனுக்கு ஃபைசர் தடுப்பூசி விநியோகம் செய்யும் பயோ என்டெக் நிறுவனம் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் அதிகபட்சம் 3 வாரகால இடைவெளிதான் இருக்கவேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதேசமயம் தென்கொரியாவில் அண்மையில் ஃபைசர் ரகத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் டோஸ் போடப்பட்ட இரண்டு வாரங்களிலேயே அவை கொரோனா தொற்று பரவுவதை 90 சதவிகிதம் கட்டுப்படுத்துவது உறுதிசெய்யப்பட்டது. அதனால் முதல் டோஸ் செலுத்திய பிறகு காலம்தாழ்த்தியே இரண்டாவது டோஸ் செலுத்தலாம் என்பதை இந்தியாவும் தற்போது அமல்படுத்தியிருக்கிறது.
ஆனால் கொரோனா வைரஸ் இனவகை அதிகம் இருக்கும் நாடுகளில் இந்த சதவிகிதம் மாறும் எனவும் பிரிட்டன் மாடல்தடுப்பூசி திட்டம் குறித்து விமர்சிக்கப்படுகிறது. கொரோனா முதல் இனவகை, இந்திய இனவகை, பிரிட்டன் இனவகை, தென் ஆப்பிரிக்க இனவகை என பல்வேறு இனவகைகள் இங்கே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளன. அந்தச் சூழலில் 12 வார இடைவெளிவிட்டுப் போடும் பிரிட்டன் மாடல் தடுப்பூசி திட்டம் நமக்குச் சரிப்பட்டு வருமா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளிக்கிறார், மூத்த மருத்துவரும் நோய் எதிர்ப்புசக்தி நிபுணருமான டாக்டர் பிரிகேடியர் கே.சண்முகாநந்தன். அவர் கூறுகையில், ‘தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது உண்மைதான் ஆனால் அதனால்தான் அரசு கால அவகாசத்தை அதிகரித்துள்ளது எனச் சொல்லமுடியாது. அரசின் இந்த முடிவை ஒரு பரிணாமவளர்ச்சி அடைந்த முடிவு எனச் சொல்லலாம்.இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். அது இனிமேற்கொண்டு செய்யப்படும் ஆய்வுகளில்தான் தெரியவரும். மற்றபடி இரண்டாவது டோஸ் காலம்தாழ்த்திப் போடுவது சரியா என்பதை விட எல்லோருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி சென்று சேர்கிறதா என்பதை முதலில் உறுதிபடுத்த வேண்டியிருக்கிறது. கோவிஷீல்ட் முதல் டோஸ் கிட்டத்தட்ட எல்லா இனவகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது. முதல் டோஸ் அதிகம்பேருக்குப் போடுவதால் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது, பாதிப்பு இருந்தாலும் அவர்களில் இறப்பவர்கள் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் எல்லோருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி என்பதை முதலில் உறுதிசெய்யவேண்டியதுதான் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை விட முக்கியமானது’ என்கிறார்.
தடுப்பூசிதான் தீர்வு! தடுப்பூசி எல்லோருக்கும் கிடைப்பதுதான் தீர்வு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)