MP Congress promises: பாஜகவுக்கு செக்? மத்திய பிரதேச காங்கிரஸ் கொடுக்கும் தரமான 11 தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு போட்டியாக, காங்கிரஸ் கட்சி 11 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு போட்டியாக, காங்கிரஸ் கட்சி 11 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
மத்தியபிரதேச தேர்தல்:
2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்று, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால், அக்கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் பாஜகவில் இணைந்தார். இதனால், சிவராஜ் சிங் சவுகான் அங்கு மீண்டும் முதலமைச்சரானார். இந்நிலையில் தான் அங்கு மீண்டும் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வென்று ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தாராள பாஜக:
இந்நிலையில், அம்மாநிலத்தில் மொத்த வாக்காளர்களில் 48 சதவிகிதமாக உள்ள பெண்களை கவரும் விதமாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அண்மையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ”நலிவடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.1250 ஆக உயர்த்தப்படும். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கு 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். மாநில அரசு வேலைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு, மாநிலத்தில் உள்ள பெண்களின் முழுக் கல்விக்கும் நிதியுதவி, மதுக்கடைகளை பாதியாக குறைப்பதற்கு மதுக் கொள்கையில் திருத்தம் செய்யப்படும்” போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது தேர்தலில் நல்ல பலனை அளிக்கும் என பாஜக நம்பியுள்ளது.
காங்கிரஸ் பதிலடி:
இந்நிலையில் பாஜகவிற்கு பதிலடி தரும் வகையில், கமல்நாத் தலைமையிலான மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளன. கமல்நாத்தின் 11 வாக்குறுதிகள் என்ற தலைப்பில் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
- விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி
- மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது
- பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை
- ரூ.500 எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்
- மாநிலம் முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
- ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு
- 100 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசம், 200 யூனிட்கள் வரை பாதிக்கட்டணம், 5Hp திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கான மின்சார கட்டணம் ரத்து
- விவசாயிகளுக்கு 12 மணி நேர மின்சார விநியோகம்
- விவசாயிகளுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும், என்பன போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக, காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஒப்பந்தங்களை வழங்க முதலமைச்சர் 50 சதவிகிதம் வரை கமிஷன் வாங்குவதாகவும் விமர்சித்து மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகிறது. இந்நிலையில் தான், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான மோதல் தொடங்கியுள்ளது.