காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - அஷ்வினி குமார் விலகல் குறித்து அதிருப்தி தலைவர்கள் கருத்து
பஞ்சாபில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான தலைமையைக் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது
அஷ்வினி குமார் போன்ற மூத்தத் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் மாநிலங்களவை, முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான அஷ்வினி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து,கட்சித் தலைமலைக்கு எழுதிய விலகல் கடிதத்தில், “ விரிவான ஆய்வுக்குப்பின், தற்போதைய சூழ்நிலையில், கட்சிக்கு வெளியே இருந்து தேசத்துக்கான சேவைகள் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இது, எனது கண்ணியத்தையும் பாதுகாக்கும். அதன்படி, 46 ஆண்டுகால உறவுக்குப் பிறகு நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமை என்ற சிந்தனையை ஆதாரமாக் கொண்டு மக்கள் சேவையை தொடர முயற்சிக்க உள்ளேன். தாராளமய ஜனநாயகம் என்ற நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்க உள்ளேன்" என்று தெரிவித்தார்.
பின்பு, தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், " பஞ்சாப் தேர்தலின் பொது காங்கிரஸ் தன்னை காட்சிப்படுத்திய விதம் வேதனையளித்தது. இதுவே,கட்சியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தத்தை அளித்தது. காங்கிரஸ் என்பது மாபெரும் விடுதலை இயக்கமாக இருந்த ஒன்று. சாதி, மத போன்ற விசயங்களைக் கடந்த ஒன்று. ஆனால், பஞ்சாப் தேர்தலில் சாதி என்ற அடையாள அரசியலை கையில் எடுத்தது ஏன்? பஞ்சாபில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான தலைமையைக் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது என்றார்.
பஞ்சாபில் தலித் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி முன்னதாக பதவியேற்றுக் கொண்டார். மேலும், 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக சரண்ஜித் சிங் சன்னியை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது
மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர். ஒதுக்கதலுக்கு உள்ளாகியுள்ளனர். விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கட்சியில் இருந்து வெளியேறுவது போன்ற தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு தகுந்த காலத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காலம் தான் அவர்களின் அரசியல் இருத்தலை உறுதி செய்யும் " என்றும் தெரிவித்தார்.
நேர்காணலின் போது புதிய காங்கிரஸ் என்ற சொல்லாடலைப் பயன்படுத்திய அவர், " தற்போது கட்டமைக்கப்படும் புதிய காங்கிரசின் எதிர்காலம் இருண்டதாக உள்ளது. பிரதமர் மீது மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால், காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கவில்லை? இங்கு முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துகள், எதிர்க் குரல்களுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பில்லை என்பதை உணர வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் சிலையை பிரச்சனையாக்க வேண்டிய அவசியம் என்ன? குலாம் நபி ஆசாத்துக்கு விருது வழங்குவது ஏன் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது?" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அஷ்வினி குமார் போன்ற மூத்தத் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களைவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் இது குறித்து கூறுகையில்,"கட்சித் தலைமை தாங்களாகவே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சில அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறு செயல்படுகின்றனர் என்றளவில் விசயம் சுருங்கி விடக்கூடாது. கட்சிக்குள் சில குழப்பங்கள் இல்லாமல், அஷ்வினி குமார் போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய நிலைப்பாடை எடுக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
அதிருப்தி தலைவர்கள்:
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் அடிப்படை சீர்த்திருத்தம் வேண்டி 23 அதிருப்தி காங்கிரஸ்காரர்கள் (G23) கடந்தாண்டு கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்குள் பொதுவாக அதிருப்திக்கு இடம் இருந்தாலும், காந்தி குடும்பத்தின் தலைமைக்கு எதிரான நேரடி அதிருப்தி இதுவாகும். 1966 மற்றும் 1977களில் காங்கிரஸ் கட்சி பிளவை சந்தித்த போதும், அதிருப்தி உருவாக்கியது இந்திரா காந்தி.
தற்போது, கட்சிக்குள் மூத்தத் தலைவர்கள் முன்னிலைப்படுத்தவில்லை என்பதே G23 தலைவர்களின் முக்கிய அதிருப்தியாக உள்ளது. கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் அடிப்படை மாண்புகளுக்கு சமரசம் செய்து கொள்ளாத இளம் தலைவர்களை ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தி வருகின்றார்.
இதன் வெளிப்பாடாகவே, இளம் தலைவர்களின் ஒருவரானா அனுமுளா ரேவந்த் ரெட்டி-ஐ தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவையும் நியமித்தது. அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கயிருக்கும் குஜாரத் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக, ஹர்த்திக் படேலை நியமித்தது.
Punjab Dalit Politics: முதல் தலித் முதல்வர்... பஞ்சாப் தலித் அரசியல் ஒரு பார்வை!