Rajiv Gandhi Birth Anniversary: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் ..லடாக் ஏரியில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1944ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஃபெரோஸ் காந்தி மற்றும் இந்திரா காந்தி தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தவர் ராஜீவ் காந்தி. கடந்த 1947ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ராஜீவ் காந்திக்கு வயது மூன்று. பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த அவருக்கு
பொறியியல் மீது தீராக்காதல்.
இதனால், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர், பைலட் ஆக விரும்பிய ராஜீவ், இந்தியாவுக்கு திரும்பி டெல்லியில் அதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார்.
ராஜீவ் காந்தி காந்தி பிறந்த தினம்:
இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு, நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமையும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பெற்ற நேரு குடும்பத்தின் கடைசி பிரதமர் என்ற சிறப்பும் ராஜீவ் காந்தியையே சாரும். 40 வயதிலேயே பிரதமராக பதவியேற்ற உலகின் இளம் தலைவர்களில் ஒருவர் ராஜீவ் காந்தி. இதன்மூலம் இந்திய அரசியலில் இளைஞர்கள் நுழைய நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் மரியாதை:
வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து, எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் ராஜீவ் காந்திக்கு புகழாரம் சூட்டிய மல்லிகார்ஜூன கார்கே, "இந்தியாவின் சிறந்த மகன் ராஜீவ் காந்தி.
கோடிக்கணக்கான இந்தியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்திய தலைவர். இன்று சத்பவனா திவாஸை (ராஜீவ் பிறந்தநாள்) நாம் அனுசரிக்கும்போது, இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்கு முன்னெடுத்துச் சென்ற அவரது மகத்தான பங்களிப்பை நினைவுகூருவது பொருத்தமானது.
வாக்களிக்கும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை வலுப்படுத்துதல், கணினிமயமாக்கல் திட்டம், அமைதி உடன்படிக்கைகள், உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம், அனைவரையும் உள்ளடக்கிய கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக் கொள்கை போன்ற அவரது எண்ணற்ற தலையீடுகள் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ராஜீவ் காந்திஜியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதையை செலுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் நேற்று ட்ரீப் சென்றார். பாங்காங் ஏரியின் கரையில் இன்று வைக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.