(Source: ECI/ABP News/ABP Majha)
அணையில் விழுந்த ஒரு லட்ச ரூபாய் செல்போன்... வீணடிக்கப்பட்ட 21 லட்சம் லிட்டர் தண்ணீர்: அரசு அதிகாரி சஸ்பெண்ட்!
அணையில் விழுந்த தன்னுடைய விலையுயர்ந்த செல்போனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அதிலிருந்து வெளியேற்றி வீணடித்துள்ளார் அரசு அதிகாரி ஒருவர்.
சத்தீஸ்கரில் அரசு அதிகாரி ஒருவர், அணையில் விழுந்த தன்னுடைய விலையுயர்ந்த செல்போனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அதிலிருந்து வெளியேற்றி வீணடித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் அதிர்ச்சி:
கான்கேர் மாவட்டம் கோயிலிபேடா பிளாக்கில் உள்ள உணவு அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ், கெர்கட்டா அணையில் விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது ஸ்மார்ட்போனை அதில் தவறவிட்டுள்ளார்.
15 அடி ஆழம் கொண்ட அணையில் விழுந்த ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க உள்ளூர்வாசிகள் முயற்சித்தனர். முயற்சி தோல்வியடைந்ததால், இரண்டு 30 ஹெச்பி டீசல் பம்புகளை மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அதிகாரி வெளியேற்றினார். 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமான தண்ணீரை வீணடித்து தன்னுடைய செல்போனை வெளியே எடுத்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை தொடங்கி வியாழக்கிழமை வரை இந்த பம்புகளின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீர் வீணாக்கப்படுவதாக புகார் சென்றதன் பேரில் நீர்பாசனம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் வெளியேற்றுவதை நிறுத்தி உள்ளார். ஆனால், அதற்குள் நீர் மட்ட அளவு ஆறு அடி குறைந்துவிட்டது.
அரசு அதிகாரியின் செயலால் அதிர்ச்சி:
சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இப்பகுதியில் கோடைகாலங்களில் கூட 10 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் இருந்திருக்கிறது. இதனைதான், விலங்குகள் குடித்துள்ளன.
இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது என்றும் மூத்த அதிகாரியிடம் வாய்மொழி அனுமதி பெற்ற பிறகே தண்ணீரை வெளியேற்றியதாகவும் ராஜேஷ் விஸ்வாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில், "ஞாயிறு அன்று அணைக்கு சில நண்பர்களுடன் குளிக்கச் சென்றேன். ஓடும் தண்ணீரில் எனது தொலைபேசி நழுவியது. எதற்குமே அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாது. 10 அடி ஆழம் இருந்தது. அப்பகுதி மக்கள் அதை கண்டுபிடிக்க முயன்றனர்.
ஆனால், முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று அடி ஆழம் குறைவாக இருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் அதிகாரியை அழைத்து, அவ்வாறு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அருகிலுள்ள கால்வாயில் சிறிது தண்ணீரை வெளியேற்ற அனுமதிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
3-4 அடி ஆழத்தில் தண்ணீர் வடிந்தால் பிரச்சனை இல்லை என்றும், அதிக தண்ணீர் விவசாயிகளுக்குத்தான் பலன் கிடைக்கும் என்றார். அதனால்தான் சுமார் மூன்று அடி தண்ணீரை வெளியேற்ற உள்ளூர்வாசிகளின் உதவியைப் பெற்று எனது தொலைபேசியை திரும்பப் பெற்றேன்" என்றார்.
நீர்வளத் துறை அதிகாரி பின்னர் உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐந்து அடி வரை தண்ணீரை வெளியேற்ற தான் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால், நிறைய தண்ணீர் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். லட்சக்கணக்கில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பிறகும் அந்த செல்போன் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.