Helicopter Exam Papers : ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்.. அவ்ளோ பாதுகாப்பு எதுக்கு?
சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டன.
சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், அங்கும் இங்குமாய் நக்சல்கள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட, பிஜாப்பூர் - சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பொதுத்தேர்வுகள் தொடக்கம்:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், நக்சல் தாக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. நாளை +2 பொதுத்தேர்வுகள், அங்கு தொடங்கப்பட உள்ளது.
இதற்காக, சத்தீஸ்கர் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. சத்தீஸ்கரில் நக்சல்களின் தாக்கம் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டன.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத்தின் ஜகர்குண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டன. நக்சலைட்டுகள் ஆதிக்கம் காரணமாக கடந்த ஆண்டும் இதேபோல் ஹெலிகாப்டர் மூலமாக வினாத்தாள்கள் கொண்டுவரப்பட்டன.
ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்:
சத்தீஸ்கரை பொறுத்தவரையில், கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், நக்சல்களின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு போலீஸ் முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர். இதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா-பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதில் பேசிய அவர், "இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.
கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது. நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.