`மன்னிப்பு அல்லது 100 கோடி ரூபாய்!’ - அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை வழக்கறிஞர்!
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான `தி நியூயார்க் டைம்ஸ்’ நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான `தி நியூயார்க் டைம்ஸ்’ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெகாசஸ் உளவு விவகாரத்தில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரை போலியானது எனவும், இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக கட்டுரை பிரசுரித்துள்ளதாகவும் சென்னை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் என்பவர், அமெரிக்காவின் பிரபல முன்னணி இதழான `தி நியூயார்க் டைம்ஸ்’ மீது சட்டப்படி எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த ஜனவரி 28 அன்று, `இந்தியா இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தத்தின் கீழ், கடந்த 2017ஆம் ஆண்டு, 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்கப்பட்ட போது, அதனோடு பெகாசஸ் செயலியையும் வாங்கியது’ என பெகாசஸ் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்றைச் செய்தியாக வெளியிட்டிருந்தது `தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ்.
இந்தச் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்கள் இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவை பொய்யாக இருக்கலாம் எனவும், இதனால் இந்த செய்தி வெளியிடப்பட்டதால் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள், தி நியூயார்க் டைம்ஸ் இதழ் தங்களது முதல் பக்கத்தில் இந்தச் செய்திக்காக மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, நியூயார்க் டைம்ஸ் இதழ் சார்பாக இழப்பீடாக 1 கோடி ரூபாய் பணம் அல்லது 13.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் இந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
Chennai advocate issues legal notice to New York Times pic.twitter.com/E34fQe8514
— Mohamed Imranullah S (@imranhindu) February 2, 2022
நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்ட செய்தியில், கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா இஸ்ரேலிடம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போர் ஆயுதங்கள், புலனாய்வுக் கருவிகள் முதலானவற்றை வாங்கியது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் மையப்புள்ளியாக பெகாசஸ் உளவு செயலியும், மற்றொரு ஏவுகணைத் திட்டமும் இருந்ததாகவும் இந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் பாலஸ்தீன் மனித உரிமைகள் ஆணையத்திற்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கலாமா என்ற வாக்குப் பதிவின் போது, இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்ததையும் இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் தூதர் சையது அக்பருத்தீன் நியூயார்க் டைம்ஸ் இதழின் குற்றச்சாட்டுகள் குப்பையாக இருப்பதாக விமர்சித்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், இந்தக் கட்டுரையின் காரணமாக உலகின் நட்பு நாடுகளுக்கு முன், இந்தியாவுக்குக் கெட்ட பெயர் கிடைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.