Watch Video: சந்திரயானை விமானத்தில் இருந்தபடி கண்டுகளித்த பயணிகள்; இப்போது வைரலாகும் வீடியோ..
சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் சீறிப்பாய்ந்ததை விமானத்தில் இருந்தபடி பயணிகள் பார்த்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் சீறிப்பாய்ந்ததை விமானத்தில் இருந்தபடி பயணிகள் பார்த்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ டாக்காவில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த பயணி ஒருவர் எடுத்துள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்திரயான் 3 விண்கலம்:
கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் தோல்வியின் மூலம் கிடைத்த படிப்பினைகளை கொண்டு 4 ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு, சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக 10 கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் எல்.வி.எம் 3 ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தியது தான் முதற்கட்டம். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
Don't miss this #Chandrayaan3 launch view 🔥💥
— 𝖺𝗋𝖾𝗒 𝖣𝗂𝗅𝗅𝗂𝗉𝗎𝗎𝗎🚶♂️ (@TheDileep7) July 15, 2023
aerial view elegant 🥳💝 pic.twitter.com/H8eY1AWIVL
3வது கட்டத்தில் வெற்றிகரமான தொடக்கம்:
இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான், விண்கலத்தை நிலவிற்கு அருகில் கொண்டு செல்ல பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து நெடுந்தொலைவிற்கு செல்ல உந்துதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு 170 கிலோமீட்டர் தூரத்தை விண்கலம் அடையும்போதெல்லாம் உந்துதல் சக்தி கொடுக்கப்பட்டு நிலவை நோக்கி தள்ளிவிடப்படும். இந்த மூன்றாவது கட்டத்தின், முதல் முயற்சி தான் தற்போது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த 18 நாட்களுக்கு இந்த பணி தொடரும்.
Beautiful view of Chandrayaan 3#Chandrayaan3 🙏🏻🚀🇮🇳@isro @narendramodi pic.twitter.com/zUrF9Dvhf3
— Shweta Gupta🌸 (@ShwetaGup001) July 16, 2023
இஸ்ரோ அறிவிப்பு:
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கி.மீ. x 226 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
மீதமுள்ள 7 கட்டங்கள்:
- அடுத்ததாக, பூமிக்கும், நிலவுக்கும் இடையே சம ஈர்ப்பு விசைப் புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தை நகர்த்துவது தான் நான்காவது கட்டம்.
- அடுத்தகட்டமாக சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருப்பது தான் ஐந்தாவது கட்டம். இதனை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்
- சம ஈர்ப்பு விசை புள்ளிக்குச் சென்ற விண்கலம் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் செல்ல உந்துதல் கொடுக்கப்படுவது ஆறாவது கட்டம்.
- நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்த பிறகு சந்திரயான் 3 விண்கலனை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும் என்பது ஏழாவது கட்டம்
- விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது எட்டாவது கட்டம்.
- ஒன்பதாவது கட்ட செயல்முறை என்பது வெறும் 15 நிமிடங்களில் நிகழ்த்தப்பட உள்ளது. அந்த பதினைந்து நிமிடங்கள் தான் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது. விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என்ற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில் தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இவை அனைத்தும் வெறும் 15 நிமிடங்களில் நிகழ வேண்டும்.
- இறுதிக்கட்டமாக, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் பயணித்து நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தான் சந்திரயானின் 10வது கட்டமாகும்.