ChandraBabu Naidu: கைதி எண்-7691, சிறையில் சந்திரபாபு நாயுடு.. ”வீட்லயே இருந்துக்கிறேன்” - ஜாமீன் மனுவில் கோரிக்கை
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜாமின் கேட்டு இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்ற காவலின் போது வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளர்.
சந்திரபாபு நாயுடு கோரிக்கை:
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மற்றும் தெலுகு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, வரும் 22ம் தேதி வரை சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் தரப்பில் இரண்டு ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு மனுவில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், மற்றொரு மனுவில் நீதிமன்ற காவலின் போது தன்னை வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
ஊழல் வழக்கில் கைது:
சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். விடிய விடிய நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று காலை விஜயவாடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக ஜாமீன் வழங்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மருந்து, சிறையில் சிறப்பு அறை ஆகியவற்றை ஒதுக்குவதோடு, உயிருக்கு ஆபத்து உள்ளதால் சந்திரபாபு நாயுடுவிற்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறையில் சந்திரபாபு நாயுடு:
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சினேகா பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு 7691 என்ற கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, வரும் 22ம் தேதி காலை 10.30 மணியளவில் சந்திரபாபு நாயுடுவை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனிடையே, சந்திரபாபு நாயுடுவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கக் கோரி, அவரது தரப்பு இன்று உயர்நீதிமன்றத்தை அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
144 தடை உத்தரவு:
சந்திரபாபு கைதை தொடர்ந்து அவரது தலைமையிலான தெலுங்கு தேச கட்சி இன்று மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. எனினும், தற்போது வரை வாகன போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் தலைவர்களை காவல் துறை வீட்டு காவலில் வைத்து உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேனா, பா.ஜ.க. ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.