Cervical Cancer Vaccine : கருப்பைவாய் புற்றுநோயை தடுக்க நடவடிக்கை...9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு பள்ளிகளில் தடுப்பூசி...! முழு விவரம்..
வரும் 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செர்வாவாக் தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பள்ளிகளில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை வழங்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை வழங்கிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 2023ஆம் ஆண்டின் மத்திக்குள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செர்வாவாக் தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரில் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அந்த வகையில், பொது சுகாதாரத் திட்டத்தில் தடுப்பூசியை பயன்படுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதலில் 10 முதல் 14 வயது சிறுமிகளுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். பின்னர், 9 வயது சிறுமிகளுக்கு் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும். இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஆரம்ப பள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நாளில் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமிகளுக்கு சுகாதார நிலையத்தில் தடுப்பூசி வழங்கப்படும். பள்ளியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சிறுமிகளுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று தடுப்பூசி போடப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் எழுதிய கடிதத்தில், "பள்ளிகளில் HPV தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்வதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, 9-14 வயதுடைய பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கும், ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளியிலும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளின் போது அவர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அது இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். அதேபோல, உலகளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் நடக்கும் நான்கு உயிரிழப்புகளில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில் நிகழ்கிறது.
கர்ப்பப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளித்தால் அதை தடுக்கலாம். குணப்படுத்தலாம்.
பெரும்பாலான நேரங்களில் இந்த புற்றுநோய், ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸால்தான் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தாக்கப்படுவதற்கு முன்பே, HPV தடுப்பூசியை செலுத்தினால், இந்த புற்றுநோயை தடுக்கலாம்.