உஷார்.. மோசமாகும் காற்று மாசு.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அலர்ட்
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.
காற்று மாசுபாட்டின் காரணமாக இந்தியாவின் முக்கிய நகரங்கள், வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது.
நாட்டின் முக்கிய முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் IQAir தகவல் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் காற்று மாசு:
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வரவிருக்கும் பண்டிகைக்காலத்தில் காற்றின் தரம் இன்னும் மோசமாகலாம் என்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதற்கு ஏற்றவாறு சுகாதாரத்துறையை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறும் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறைக்கு சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் அதுல் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், "காற்று மாசுபாடு கடுமையான நோய்களுக்குக் காரணம் மட்டுமல்ல. சுவாச, இருதய மற்றும் பெருமூளை அமைப்புகளின் நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கிறது.
மத்திய அரசு எச்சரிக்கை:
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், போக்குவரத்துக் காவல் மற்றும் நகராட்சிப் பணிகளில் ஈடுபடுபவர்கள் போன்று அதிக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
இதற்காக படுக்கைகள் ஒதுக்கீடு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் மேம்பட்ட பொது விழிப்புணர்வு ஆகியவை தேவைப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த மாதம் அனுப்பிய கடிதத்தில், "காற்று மாசுபாடு தொடர்பான நோய்கள் மீதான கண்காணிப்பை விரிவுபடுத்தவும், அத்தகைய நோய்கள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்யவும், சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.