Tejashwi Yadav: ரயில்வே பணி நியமன ஊழல்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன்
ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்விக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக தேஜஸ்வி யாதவ்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே ஊழல்:
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.
இவரின் ஆட்சி காலத்தில் ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் ஏராளமானோர் பணி நியமனம் செய்யப்பட்டதாகவும், அப்போது, லாலுவின் குடும்பத்தினர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக பலரிடம் நிலத்தை அன்பளிப்பாகவும் குறைந்த விலையிலும் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது.
இந்த ஊழல் வழக்கில் லாலு யாதவின் இளைய மகனும் தற்போது பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் மீது, சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ சோதனை:
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சில வாரங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். கடந்த திங்கள்கிழமை, லாலுவின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. அப்போது, விசாரணைக்கு ஆஜராக சில நாட்கள் தேஜஸ்வி யாதவ் அவகாசம் கோரியிருந்தார்.
அதையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.