Manipur Violence: மணிப்பூர் வன்முறை திட்டமிட்ட சதியா..? கையில் எடுத்த சி.பி.ஐ.. சூடுபிடிக்கும் விசாரணை..!
மணிப்பூரில் ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. எஸ்ஐடி அமைக்கப்பட்டிருப்பது, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்த முடிவை சிபிஐ இன்று அறிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய மணிப்பூர் வன்முறை:
சமீபகாலமாக, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை நாட்டையே உலுக்கி வருகிறது. மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில நடவடிக்கைகளை எடுத்தார். அதன் ஒரு பகுதியாக, பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆறு வழக்குகளை தேர்வு செய்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
3,700 வழக்குகள்:
இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வராததது போல் தெரிகிறது. வன்முறை நாளுக்கு நாள் அதிகமாக, அங்கு அமைதி திரும்பாத நிலையில் உள்ளது. இதனால், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி தாயுடன் எரிக்கப்பட்ட கொடூரம்:
சமீபத்தில் கூட, குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.
இந்த சூழலில்தான், மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.