Cauvery Water: காவிரி விவகாரம்: தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றதா ஒழுங்காற்று குழு? கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழகத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,000 கனஅடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
![Cauvery Water: காவிரி விவகாரம்: தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றதா ஒழுங்காற்று குழு? கூட்டத்தில் நடந்தது என்ன? Cauvery Water Regulation Committee Recommends Karnataka Govt to Release 3000 Cusecs Water To Tamil Nadu Cauvery Water: காவிரி விவகாரம்: தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றதா ஒழுங்காற்று குழு? கூட்டத்தில் நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/11/990e1e79f6f6189f6e059b5b0e6924661697021244228572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Cauvery Water: தமிழகத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,000 கனஅடி நீரை திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி பிரச்னை:
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. நமக்கான உரிமையையே ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.
காவிரி ஆணைய உத்தரவுப்படி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரை தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தண்ணீரின் அளவு குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு கூறியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்:
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், போதிய நீர் இல்லை என்று கூறி, நீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தது. இந்த சூழ்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் இன்று கூடியது.
இதற்கு ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா பங்கேற்றார். காணொலி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் பட்டாபி ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
3,000 கனஅடி நீர் திறக்க பரிந்துரை:
கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் காவிரியில் நீர் திறந்துவிட்டுள்ளதாக என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர், விநாடிக்கு 13,000 கனஅடி விதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து, தமிழகத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,000 கனஅடி காவிரி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை வைத்துள்ளது. நீர் பற்றாக்குறையால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக கர்நாடகா தெரிவித்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)