Cauvery Water Dispute Case: நதிநீர் பங்கீடு விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...!
காவிரியில் நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Cauvery Water Dispute Case: காவிரியில் நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி பிரச்சனை:
தமிழ்நாட்டிற்கும் - கர்நாடகாவிற்கு இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதனை சரி செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது. ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் அம்மாநில அரசு பாரப்பட்சம் காட்டி வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டிற்கான பங்கீட்டு தண்ணீரை கர்நாடகம் தர மறுத்து வருவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் ஒரு புதிய மனு கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களை காக்கும் விதமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மீதமிருக்கும் நாட்கள் வரை 24 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட ஆணையிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி செப்டெம்பர் மாத நீரின் அளவான 36.76 டி.எம்.சி தண்ணீரையும் திறந்துவிட வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட புதிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதம்:
விசாரணையில், ”நாங்கள் திறந்துவிட்ட தண்ணீரை தமிழ்நாடு வீணடித்து விட்டது என்று நீதிமன்றத்தில் கர்நாடக அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும், போதிய மழை இல்லாத காரணத்தால. கர்நாடகத்துக்கு தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. எங்கள் தரப்பு விஷயங்களை நாங்கள் படும் சிரமங்களை எடுத்துரைக்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் நாங்கள் முயற்சி செய்தபோது அதை கேட்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்" என்றது கர்நாடக அரசு.
இதனை அடுத்து, ”காவிரி ஆணையம் 10,000 கன அடி வீதம் நீரை திறக்க உத்தரவிட்டும் அதனை கர்நாடகம் செய்யவில்லை. தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் இல்லாமல் உள்ளது. மழைப்பொழிவும் குறைவாக இருப்பதால் மிகக் கடுமையான வறட்சி சூழலை சந்தித்து வருகிறோம். கர்நாடக தண்ணீரை திறந்துவிடவில்லை எனில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்" என்று தமிழக அரசு வாதிட்டது.
செப்டம்பர் 1க்கு ஒத்திவைப்பு:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பதில் தர உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தான் நிபுணர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிபுணர்கள் அல்ல. எனவே எதையும் விசாரிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது என்பது எங்களுக்கு சிரமம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடத்த வேண்டும். கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா முன்வைக்கும் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா செயல்படுத்தியதா என்பது குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் விளக்கம் தேவை எனவும் அணைகளில் தற்போதைய நீர் இருப்பு விவரம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.