Diwali Bonus: 'தீபாவளி போனஸ் ரெடி' படுகுஷியில் ரயில்வே ஊழியர்கள் - மத்திய அரசு அறிவிப்பு!
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம், தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதம் அளித்துள்ளது.
Diwali Bonus: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம், தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போனஸ் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
78 நாட்கள் போனஸ்:
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்தாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த 11 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 1,968 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டோருக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
Cabinet approves Productivity Linked Bonus (PLB) of Rs 1968.87 Crores for railway employees. https://t.co/LzMP11j39X pic.twitter.com/Lf0TIRnFTu
— South Western Railway (@SWRRLY) October 18, 2023
அகவிலைப்படி உயர்வு:
முன்னதாக நேற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மாத சம்பளத்துடன் ரூ.7,000 வரை போனஸ் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெற உள்ளனர். அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு 12 ஆயிரத்து 857 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
USA and War: ஆதிக்க ஆசை, ஆயுத விற்பனையில் கொள்ளை லாபம் - உலக நாட்டாமையாக அமெரிக்கா ஆசைப்படுவது ஏன்?