Budget 2023: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
Budget 2023: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில் கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பான தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று 2023 -2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது சாமானியர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமான வரி விலக்கு உச்சவரம்புதானே ஆகும். தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 2.5 லட்சமாக உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன்பின்பு, வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
2014ம் ஆண்டுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இரு்து வருகிறது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையானது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மாத சம்பளதாரர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அடுத்தாண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பல்வேறு கவர்ச்சி திட்டங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் மனதை குளிர வைப்பதற்காக தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா? என்பது தெரிந்து விடும். மேலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பல பொருட்களின் விலை உயர்வதற்கும், சில பொருட்களின் விலை குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Budget 2023 LIVE: 2023-24: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்துக்கு வருகை!
மேலும் படிக்க: Budget 2023 : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எவ்வளவு? - ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்!