பெண்ணுறுப்பு சிதைப்பு முறையை தடுக்க சட்டம் வேண்டும் - பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய தலைவர் கடிதம்
பெண்ணுறுப்பு சிதைப்பு முறையை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என, பிரதமர் மோடிக்கு இஸ்லாமியர் தலைவர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மோடிக்கு கடிதம்:
தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்த மதத் தலைவரான சையத்னா தாஹெர் ஃபக்ருதீன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், முஸ்லீம் சமூகத்தினரிடையே பொதுவான பெண் பிறப்புறுப்பைச் சிதைக்கும் பழக்கத்தை தடை செய்வதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இந்த நடைமுறையை தடை செய்வதற்கும், பெண்ணுறுப்பு சிதைப்பை சட்டவிரோதமாக்குவதற்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சட்டம் கொண்டு வர வேண்டும்:
அதோடு, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் செய்யப்படும் காஃப்ஸ் (பெண்ணுறுப்பு சிதைப்பு) முறை தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த செய்முறையானது, சுகாதாரமற்ற சூழலிலும், பாதுகாப்பற்ற முறையிலும் செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால், பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு மருத்துவ சிக்கலுக்கும் ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண்கள் முதிர்ச்சியடைந்து சுயசிந்தனையோடு முடிவெடுக்கும் வரையில், பெண்ணுறுப்பு சிதைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
90% பேர் வரை பாதிப்பு
இந்த நடைமுறையால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் இல்லாவிட்டாலும், போஹ்ரா சமூகத்தை சேர்ந்த பெண்களில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் இந்த செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 2017 ஆம் ஆண்டில், மனிதாபிமானமற்ற இந்த நடைமுறையில் இருந்து தப்பிய பலரைக் கொண்ட “ஸ்பீக் அவுட் ஆன் எஃப்ஜிஎம்” என்ற அமைப்பு, இந்த நடைமுறையைத் தடை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
பெண்ணுறுப்பு சிதைப்பு என்றால் என்ன?
பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கலாசார நம்பிக்கையினால் பெண்ணுறுப்பு சிதைப்பு செய்யப்படுகிறது. பெண்களின் பிறப்புறுப்பில் உட்புற மற்றும் வெளிப்புற இதழ்கள் மற்றும் யோனியை நீக்குவது பெண்ணுறுப்பு சிதைப்பு எனப்படுகிறது. இதனால், பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உடலுறவின்போது வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
யுனிசெஃப் கருத்து:
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (unicef) கணக்கெடுப்பின்படி, சுமார் 40 லட்சம் பெண்கள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பெண்ணுறுப்பு சிதைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த செயல்முறையை 2030ம் ஆண்டுகள் முழுமையாக ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண்ணுறுப்பு சிதைப்பு முறையை நீக்குவது குறித்து 2012-ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது. ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 29 நாடுகளில் இப்பழக்கம் உள்ளது. அவற்றில் 24 நாடுகளில் இதற்கு எதிரான சட்டமும் உள்ளது. இந்தியாவிலும் பெண்ணுறுப்பு சிதைப்பு நடைமுறையைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒரு மனு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் தான், அதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.