Breaking News LIVE:தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய திருவிழா - சிறப்பு ரயில்கள் இயக்கம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கடந்த ஜூன் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வீட்டில் கிட்டதட்ட 17 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்ற போது, செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், இதய அறுவைச் சிகிச்சை செய்யவும் பரிந்துரைத்தனர்.
இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் எடுக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 8 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற உத்தரவின்படி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை.
அதேசமயம் தமிழ்நாடு அரசு செந்தில்பாலாஜி வகிந்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கி, இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என தெரிவித்திருந்தது. இதற்கு அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என ஜூன் 16 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி நீக்கம்
ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு பதிலடி கொடுத்தது. இந்நிலையில் குற்ற நடவடிக்கைகள் செந்தில் பாலாஜி எதிர்கொள்வதால், அமைச்சராக இருக்கும் பட்சத்தில் விசாரணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை சட்டப்படி சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார். எனவே செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், செந்தில் பாலாஜி கைதானது குறித்து என்னிடம் நீங்கள் கூறவில்லை. அமைச்சரவை இலாகா மாற்றம் தொடர்பான உங்கள் பரிந்துரையை ஏற்றுக்கொண்டேன். எனது அறிவுரையை மீறி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை. இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த பதில் ஏமாற்றம் அளிக்கிறது. அவர் அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என கோரியதற்கு உரிய விளக்கம் தராமல் ஜூன் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆலோசனை..!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் கட்சியின் வியூகக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய திருவிழா - சிறப்பு ரயில்கள் இயக்கம்
தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி
கரூரில் நாளை பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்பு
தலைமை செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆசிய ஸ்குவாஷ் போட்டி - தீபிகா இணை சாம்பியன்
ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா இணை சாம்பியன் பட்டம் பெற்றது.