Republic Day 2024 Highlights: வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு; நெஞ்சை நிமிர்த்தி வீரத்தை பறைசாற்றும் வீரர்கள்
Republic Day 2024 Highlights: நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
Republic Day 2024: இந்தியாவின் மிக மிக முக்கியமான இரண்டு தினங்களாக கொண்டாடப்படுவது சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஆகும். 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1950ம் ஆண்டு குடியரசு நாடு ஆனது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தின கொண்டாட்டம்:
நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடே கோலாகலமாக உள்ளது. டெல்லியில் முப்படைகளின் சிறப்பு அணிவகுப்புகளை ஏற்கும் நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றே இந்தியா வந்துவிட்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர். இதனால், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட அணிவகுப்பு:
டெல்லியில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்க உள்ளார். நாட்டின் பலத்தை காட்டும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தங்களது அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். இதுமட்டுமின்றி, பல மாநிலங்களின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அந்தந்த மாநில ஊர்திகளும் இடம்பெற உள்ளது.
கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி:
தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மெட்ரோ பணிகள் காரணமாக காந்தி சிலை அருகே வழக்கமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளது.
காமராஜர் சாலையில் முப்படைகளின் அணிவகுப்புடன் தமிழ்நாடு போலீசார், தேசிய மாணவர் படை அணிவகுப்பு, வனம் மற்றும் தீயணைப்புத்துறையினரின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
மேலும், குடியரசு தின அணிவகுப்பில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் விருது, திருத்தி நெல் சாகுபடி விருது உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டும், குடியரசு தின விழாவை முன்னிட்டும் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விருதுகள்:
டெல்லியில் நடக்கும் அணிவகுப்புக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் அணிவகுப்புக்காக வீரர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாட்டில் வானிலை என்பது அணிவகுப்பை பார்ப்பதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், டெல்லியில் கடந்த சில தினங்களாக வாட்டி வதைக்கும் குளிர் இன்றும் வாட்டி வதைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மிதமானது முதல் அடர்த்தியான பனிமூட்டம் காணப்படும் என்பதால் அணிவகுப்பை பார்வையிட சற்று சிரமமாக இருக்கும் என்று தெரிகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவகலங்களிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட உள்ளது.
Republic Day 2024 Highlights: தொடங்கிய தேநீர் விருந்து
75வது குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கியது.
Republic Day 2024 Highlights: வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்கும் நிகழ்வு ஆரவாரத்துடனும் கரகோஷங்களுடனும் நடைபெற்று வருகின்றது.




















