IT Raid BBC: பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை.. நடப்பது என்ன?
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில், 10 முதல் 12 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. ”சோதனை” என கூறப்பட்டாலும் இது அலுவலக நடவடிக்கைகள் தொடர்பான ”மதிப்பாய்வு” மட்டுமே என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் கலவரம்:
கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி, இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. முதல் பாகத்தில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதலமைச்சரான மோடி தான் குறிப்பிடப்பட, இரண்டாம் பாகத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது.
ஆவணப்பட சர்ச்சை:
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவுக்கு எதிரான ப்ரபுரைக்காக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழங்களில், தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. எனவே இந்த ஆவணப்படத்தை சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டிவிட்டர், பேஸ்புக் போன்றசமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்