Actor Govinda: அரசியலில் 2ஆவது இன்னிங்ஸ்.. ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!
Actor Govinda: மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா இணைந்துள்ளார்.
Actor Govinda: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
சினிமாவில் கலக்கிய நடிகர் கோவிந்தா:
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா இணைந்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில், மும்பை வட மேற்கு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மும்பையில் போட்டியிட்ட நடிகர் கோவிந்தா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம் நாயக்கை தோற்கடித்தார்.
அரசியலில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய கோவிந்தா:
தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே, சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்த அவர், "அரசியலுக்கு திரும்பியது அற்புத உணர்வை தருகிறது.
எந்த பொறுப்புகளை கொடுத்தாலும் அதை ஏற்று கொள்வேன். 2004 முதல் 2009 வரை அரசியலில் இருந்தேன். 14ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தேன்" என்றார். 1990 மற்றும் 2000களில் பல ஹிட் படங்களை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் கோவிந்தா.
கடைசியாக ரங்கீலா ராஜா படத்தில் நடித்தார். ராஜா பாபு, கூலி நம்பர் 1, ஹசீனா மான் ஜாயேகி, பார்ட்னர், பாகம் பாக் போன்ற அவரின் திரைப்படங்கள் செம்ம ஹிட் அடித்தது. லவ் 86 மூலம் திரையுலகில் அறிமுகமாகி, கடந்த 30 ஆண்டுகளாக பாலிவுட் உலகை கலக்கி வந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகும்போது அவர் அளித்த பேட்டியில், "அரசியல் என்பது எங்கள் ரத்தத்திலும், குடும்பத்திலும் இருந்ததில்லை. நான் அதற்கு திரும்ப மாட்டேன்" என்றார்.
#WATCH | On joining Shiv Sena, Veteran Bollywood actor Govinda says, "I was in politics from 2004 to 2009 and that was the 14th Lok Sabha. This is an amazing coincidence that now, after 14 years, today I have come into politics again..." pic.twitter.com/Qnil9ov8zV
— ANI (@ANI) March 28, 2024
இதையும் படிக்க: நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் - வியந்து பார்த்த நீதிபதிகள்!