"பிரதமர் பதவி தரேன் சொன்னாங்க" மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஸ்கெட்ச்.. மனம் திறந்த நிதின் கட்காரி!
எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னை அணுகி பிரதமராக வருவதற்கு ஆதரவு தருவதாக கூறினார் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .
2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னை அணுகி பிரதமராக வருவதற்கு ஆதரவு தருவதாக கூறினார் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ரகசியத்தை போட்டு உடைத்த நிதின் கட்காரி:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பத்திரிகையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நிதின் கட்காரி, "ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். அந்த நபர் என்னை அணுகி, 'நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்' என்றார்.
ஆனால், நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும். உங்கள் ஆதரவை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்டேன். பிரதமர் ஆவது என் வாழ்வின் லட்சியம் அல்ல. நான் எனது நம்பிக்கைக்கும் எனது அமைப்புக்கும் விசுவாசமாக இருக்கிறேன்.
எதிர்க்கட்சிகள் போட்ட திட்டம்:
மேலும், எனது நம்பிக்கை எனக்கு முதன்மையானது என்பதால் எந்த பதவிக்காகவும் நான் சமரசம் செய்யப் போவதில்லை. இந்த நம்பிக்கைதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன்" என்றார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள நிதின் கட்கரி, கட்சியின் தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர், தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளார்.
#WATCH | Nagpur, Maharashtra | Union Minister Nitin Gadkari says, "I do not want to name anyone but a person said to me, if you are going to become a Prime Minister, we will support you. I said, why you should support me, and why I should take your support. To become a Prime… pic.twitter.com/yo6QDpqq5b
— ANI (@ANI) September 15, 2024
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர், கட்சியில் தேசிய அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார். முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கான வாய்ப்பு தனக்கு வந்ததை நினைவுகூர்ந்திருந்தார். "அந்தக் கட்சியில் உறுப்பினராவதை விட கிணற்றில் குதித்து இறப்பதையே விரும்புகிறேன்" என தெரிவித்தார்.