தெலங்கானாவில் கைக்கொடுக்குமா வட மாநில பார்முலா? பாஜக கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்
கரீம்நகர் தொகுதியில் மாநில முன்னாள் தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைத்திராத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், கர்நாடாகாவில் ஆட்சியை பறி கொடுத்த பாஜக தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கும் பல முயற்சிகளை செய்து வருகிறது.
தெலங்கானாவின் அரசியல் சூழல்:
அதே சமயம், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை பறி கொடுத்த காங்கிரஸ், இழந்த செல்வாக்கை மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் விளைவாக ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இப்படியிருக்க, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் சந்திரசேகர் ராவ், பல சமூக நல திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அதேபோல, மக்களவை தேர்தலின்போது தெலங்கானாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியை களமிறக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெலங்கானாவில் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பாஜக கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்:
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கட்சியின் தேசியத் தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, 52 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கரீம்நகர் தொகுதியில் மாநில முன்னாள் தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் போட்டியிடுவார் என்றும், முன்னாள் அமைச்சரும், பாஜக தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஈட்டால ராஜேந்தர், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவை எதிர்த்து கஜ்வேல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜ்வேல் தொகுதியை தவிர்த்து தனது சொந்த தொகுதியான ஹுசூராபாத் தொகுதியிலும் ஈட்டால ராஜேந்தர் போட்டியிட உள்ளார்.
நிஜாமாபாத் எம்பி தர்மபுரி அரவிந்த் கொரட்லா தொகுதியிலும், அடிலாபாத் எம்பி சோயம் பாபு ராவ் போத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தானை போன்றே மக்களவை உறுப்பினர்களை மாநில தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாஜகவின் இந்த உத்தி, தேர்தலில் பலன் அளிக்குமா என்பது முடிவுகளின் போதுதான் தெரியும்.