`நூறாவது வயதில் இரண்டாவது திருமணம்!’ - மேற்கு வங்கத்தில் பேரக் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்!
மேற்கு வங்கத்தின் பிஸ்வநாத் சர்கார் என்ற முதியவரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் இணைந்து அதனை மிகவும் ஸ்பெஷலான நாளாக மாற்றியிருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசித்து வரும் பிஸ்வநாத் சர்கார் என்ற முதியவரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது 6 குழந்தைகள், 23 பேரக் குழந்தைகள், 10 கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஆகியோர் இணைந்து அதனை மிகவும் ஸ்பெஷலான நாளாக மாற்றியிருக்கிறார்கள். பல்வேறு ஐடியாக்களை விவாதித்த இந்தக் குடும்பத்தினர் இறுதியாக, பிஸ்வநாத் சர்காருக்கும் அவரது 90 வயது மனைவி சுரோத்வாணிக்கும் மீண்டும் திருமணம் செய்து அந்நாளைச் சிறப்பாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினரும், உறவினர் அனைவரும் இணைந்து சிறப்பான வகையில் கடந்த பிப்ரவரி 16 அன்று திருமண நிகழ்ச்சியை நடத்தியுள்ளது இந்தக் குடும்பம்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிஸ்வநாத் சர்கார் கடந்த 1953ஆம் ஆண்டு சுரோத்வாணியைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் மருமகள் கீதா சர்கார், `மீண்டும் திருமணம் செய்யும் இந்த ஐடியாவைச் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பார்த்த போது கவனித்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்து எடுத்தேன். அதனைத் தொடர்ந்து இந்த ஐடியாவைக் குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் பகிர்ந்தேன். அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர்’ எனக் கூறியுள்ளார்.
வெவ்வேறு மாநிலங்களின் வாழும் இந்தத் தம்பதியினரின் குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் அனைவரும் இந்தச் சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாட மீண்டும் கிராமம் திரும்பியுள்ளனர். `மாப்பிள்ளையின் வீட்டுக்குப் பெண் வருவது சடங்கு. அதனால் இதனை அதற்கேற்றவாறு திட்டமிட்டோம். எங்கள் தாத்தாவும் பாட்டியும் ஜியாகஞ்ச் பகுதியில் உள்ள பெனியாபுகூர் கிராமத்தில் வசித்து வந்தாலும், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாமுனியா கிராமத்தில் எங்கள் பரம்பரை இல்லம் இருக்கிறது. திருமணத்திற்கு 2 நாள்கள் முன்னர், எங்கள் பாட்டியை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்’ என இந்தத் திட்டமிடல் குறித்து மாப்பிள்ளையான பிஸ்வநாத் சர்காரின் பேரன்களுள் ஒருவரான பிண்டோ மண்டல் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருமணத்திற்காக மணப்பெண்ணை அவரது பேத்திகளும், மாப்பிள்ளையை அவரது பேரன்களும் அலங்காரம் செய்து தயாரித்து அனுப்பியுள்ளனர். கடந்த பிப்ரவரி 16 அன்று, பிஸ்வநாத் சர்கார் பாமுனியா கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார். பாமுனியா கிராமத்தில் மாப்பிள்ளையான பிஸ்வநாத் சர்கார் குதிரை வண்டியில் வந்து இறங்கியதும் சரவெடி வெடிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. மேலும், பாரம்பரிய திருமண உடை அணிந்த இந்த முதிய ஜோடி, ரூபாய்த் தாள்களால் செய்யப்பட்ட மாலைகளை மாற்றி மீண்டும் திருமணம் செய்துகொண்டார். `என் குழந்தைகள் சிறப்பான விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பிஸ்வநாத் சர்கார். இந்த நிகழ்ச்சிக்கும் விருந்துக்கும் கிராமத்தினர் பலரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.