இடஒதுக்கீடு வரம்பை உயர்த்திய நிதிஷ் குமார்.. பிகார் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
இடஒதுக்கீடு வரம்பை தற்போதுள்ள 50 சதவிகிதத்தில் இருந்து 65 சதவிகிதமாக உயர்த்த பிகார் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டதால் அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள்:
இச்சூழலில், விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது. அந்த வகையில், பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட விவரங்களும் நேற்று முன்தினம் சாதிவாரி பொருளாதார, கல்வி நிலை குறித்த தகவல்களை பிகார் அரசு வெளியிட்டது.
அதன்படி, பிகார் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. மாநில மக்கள் தொகையில் 15.5 சதவகிதத்தினர் பொது பிரிவினர் என கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து, சாதிவாரி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்த முடிவு செய்து, பிகார் அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.
அதிரடி காட்டிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்:
இந்த நிலையில், இடஒதுக்கீடு வரம்பை தற்போதுள்ள 50 சதவிகிதத்தில் இருந்து 65 சதவிகிதமாக உயர்த்த பிகார் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டியல் சமூக மக்களுக்கு 16 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக இடஒதுக்கீடு உயர்த்தப்பட உள்ளது. பிற்படுத்துப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 43 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்கிறது.
பழங்குடி மக்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, பொருளாதார ரீதியாக நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மசோதா சட்டமாகும் பட்சத்தில், இட ஒதுக்கீடு வரம்பு, 75 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளது.
மொத்த மக்கள் தொகையில், 42.93 சதவிகிதம் பட்டியல் சாதி மக்கள், 42.70 சதவிகித பழங்குடியின மக்கள் வறுமையில் வாடுவதாக சாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 33.16 சதவிகித பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் 33.58 சதவகித மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வறுமையில் வாடுகின்றனர். மற்ற சாதிகளில், 23.72 சதவகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 25.09 சதவிகித பொது பிரிவினர், வறுமையில் வாடுவதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.