Bharat Matrimony: ஹோலி வீடியோவுக்கு எதிர்ப்பு.. பாரத் மேட்ரிமோனிக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..
இந்த வீடியோ வைரலான நிலையில் இந்துக்களின் பண்டிகையான ஹோலியை மோசமாக சித்தரிக்கும் வகையில் வீடியோ அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின.
ஹோலி பண்டிகையின்போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை பற்றி பாரத் மேட்ரிமோனி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சர்வதேச மகளிர் தினமும் ஹோலி பண்டிகையும் இந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மார்ச் 8ஆம் தேதி திருமண சேவைகள் வழங்கும் தளமான பாரத் மேட்ரிமோனி விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றைப் பகிர்ந்திருந்தது.
“பாலியல் தொல்லைகளால் அனுபவிக்கும் மன உளைச்சல் காரணமாக பல பெண்கள் ஹோலி விளையாடுவதை நிறுத்திவிட்டனர். இதனை உணர்த்தும் இந்த வீடியோவை பாருங்கள். இந்த ஹோலி தினத்தில் பெண்களை கொண்டாடுவோம், அவர்களை தினமும் பாதுகாப்பதை தேர்வு செய்வோம்” எனும் கேப்ஷனுடன் முதலில் இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டது.
மேலும் ஹோலி கொண்டாடிவிட்டு வரும் பெண் ஒருவர் முகத்தைக் கழுவுவதும், அப்போது அவரது முகத்தில் சில காயங்கள் தென்படுவதும், “சில வண்ணங்கள் எளிதில் போகாது" எனும் வாசகம் இடம்பெறும் வகையிலும் இந்த வீடியோ அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ட்விட்டரில் கலவையான விமர்சனங்களை முதலில் பெறத் தொடங்கியது.
தொடர்ந்து இந்த வீடியோ வைரலான நிலையில் இந்துக்களின் பண்டிகையான ஹோலியை மோசமாக சித்தரிக்கும் வகையில் வீடியோ அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின.
This Women's Day & Holi, let's celebrate by creating safer and more inclusive spaces for women. It's important to acknowledge the challenges that women face in public spaces and create a society that truly respects their well-being - today & forever.#BharatMatrimony #BeChoosy pic.twitter.com/9bqIXZqaXu
— Bharatmatrimony.com (@bharatmatrimony) March 8, 2023
மேலும், "ரயில்களில் பல பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், அது ரயில்களின் தவறா? தயவுசெய்து புனிதப் பண்டிகையான ஹோலியை இழுக்க வேண்டாம்” என்றும், “பாரத் மேட்ரிமோனி அடுத்ததாக குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை காரணமாக ஏற்படும் மரணங்கள் பற்றி பேசும் ஒரு வீடியோவை வெளியிட வேண்டும். தன் தொழிலில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி முதலில் பேசட்டும்“ எனவும் கடுமையான விமர்சனங்களை இணையவாசிகள் முன்வைக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று தொடங்கி பாய்காட் பாரத் மேட்ரிமோனி எனும் ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக தன் பழைய தலைப்பை டெலீட் செய்துவிட்டு, பாரத் மேட்ரிமோனி மீண்டும் புதிய தலைப்புடன் இந்த வீடியோவைப்[ பகிர்ந்த நிலையில், பாரத் மேட்ரிமோனிக்கான எதிர்ப்பு இணையத்தில் தொடர்ந்து வலுத்து வருகிறது.