முதல் நாளே அமோகம்.. கோடிகளை குவித்த குழந்தை ராமர்.. அயோத்தி ராமர் கோயிலுக்கு இவ்வளவு நன்கொடையா?
நேற்று எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அயோத்தி கோயிலில் அலைமோதும் பக்தர்கள்:
மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 23ஆம் தேதி, 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில், நாட்டின் முக்கிய புனித தலமாக உருவெடுக்கும் என கருதப்படுகிறது. எனவே, கோடிக்கணக்கான மக்கள் ராமர் கோவிலுக்கு வந்து பணத்தை நன்கொடை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ராமர் கோயில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே நன்கொடுகளை குவிந்து வருகின்றன.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக அறக்கட்டளை ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது. தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு பிரிவினரும் இதற்காக பங்களித்து வருகின்றனர்.
கோடிகளை குவிக்கும் குழந்தை ராமர்:
நேற்று முன்தினம் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.2.51 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தனர். ராமர் கோயிலால் வருங்காலத்தில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அயோத்தி கோயில் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "ராமர் கோயில் திறப்பாலும் அயோத்தியை மதச் சுற்றுலா தலமாக ஊக்குவிக்க உத்தரப் பிரதேச அரசு எடுத்த நடவடிக்கையாலும் நிதியாண்டில் 25,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5 கோடி பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ளவர்கள் Google Pay மற்றும் BharatPe போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு பணத்தை நன்கொடையாக வழங்கலாம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆன்லைனில் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.