Governor RN Ravi: கோயில் பூசாரி, ஊழியர்கள் கண்ணில் அச்சம்.. தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தான் சாமி தரிசனம் மேற்கொண்ட கோயில் பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு இருந்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை நிறுவ உள்ளார். இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ராமர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 22, 2024
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம்…
இதன்பின்னர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை, அடக்குமுறையும் இல்லை என கோதண்ட ராமர் கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு - பாஜக தலைவர்கள் கருத்து மோதல்
ஏற்கனவே தமிழ்நாடு கோயிலில் ராமர் பெயரில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்க மாநில அரசு தடை விதித்ததாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “நாளிதழில் வெளியான தகவல் தவறு, அப்படி எதுவும் தடை விதிக்கவில்லை. மேலும் ராமர் கோயில் தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தடையை மீறி கோயில்கள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும் என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

