பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி...கடும் நடவடிக்கை எடுத்த அரசு... தொடரும் புல்டோசர் அரசியல்
பெண் ஒருவரை தகாத வார்த்தைகளை சொல்லி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகியின் சட்ட விரோத கட்டிடங்கள் இன்று புல்டோசரால் இடிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவரை தகாத வார்த்தைகளை சொல்லி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகியின் சட்ட விரோத கட்டிடங்கள் இன்று புல்டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாஜக விவசாய பிரிவு நிர்வாகியான ஸ்ரீகாந்த் தியாகி தலைமறைவாகி உள்ளார். இதை, பாஜக மறுத்துள்ளது.
நொய்டாவில் உள்ள செக்டார் 93 பி-யில் உள்ள கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டிக்கு போலீஸ் அலுவலர்களுடன் அதிகாரிகள் வந்து ஸ்ரீகாந்த் தியாகியின் சட்டவிரோத கட்டிடத்தை இடித்தார்கள். தியாகி, பெண் ஒருவருக்கிடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஹவுசிங் சொசைட்டியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தியாகியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டா காவல்துறை தியாகிக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பிரயோகித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் தியாகிக்கும் குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தியாகி சில மரக்கன்றுகளை நட விரும்பினார். ஆனால் அந்த பெண் விதிகளை மீறியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், தியாகி, அவ்வாறு செய்வதற்கு தனக்கு உரிமை இருப்பதாகக் கூறினார்.
இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. தியாகி அந்த பெண்ணை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டுவதும் தாக்குவதும் அதில் பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தியாகியின் ஆதரவாளர்கள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்து, கோஷங்களை எழுப்பி, அந்தப் பெண்ணின் முகவரியைக் கேட்டிருக்கின்றனர்.
பாஜகவின் கிசான் மோர்ச்சாவில் உறுப்பினராக இருப்பதாக தியாகி கூறி, மூத்த பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஆனால், பாஜக அவரிடமிருந்து விலகியே உள்ளது.
டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் கேம்சந்த் ஷர்மா, துஷ்பிரயோகம் செய்த ஸ்ரீகாந்த் தியாகி மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசுக்கு நன்றி தெரிவித்தார். நொய்டா 2ஆவது ஸ்டேஷன் இன்சார்ஜ் சுஜித் உபாத்யாய் இந்த வழக்கின் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி உபாத்யாய் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர், தியாகி தப்பி ஓடியதால் அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவரை கைது செய்வது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ₹ 25,000 பரிசு வழங்கப்படும் என கவுதம் புத் நகர் போலீசார் அறிவித்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, அவர் கடைசியாக உத்தரகாண்டுக்கு சென்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்