(Source: Poll of Polls)
பிரதமர் மோடி, உ.பி. முதலமைச்சரின் உயிர்களுக்கு ஆபத்தா? கொலை மிரட்டல் விடுத்த மாணவன்...தட்டித்தூக்கிய போலீஸ்...நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 16 வயது மாணவனை நோய்டா காவல்துறை கைது செய்துள்ளது.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
16 வயது மாணவன் செய்த காரியம்:
இதை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 16 வயது மாணவனை நோய்டா காவல்துறை கைது செய்துள்ளது. இவர் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர். லக்னோவில் சின்ஹாட் பகுதியில் காவல்துறை இந்த மாணவனை தட்டி தூக்கியுள்ளது.
இதுகுறித்து நொய்டா காவல்துறை உதவி ஆணையர் ரஜ்னீஷ் வர்மா கூறுகையில், "இங்குள்ள செக்டர் 20 காவல் நிலையத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த விஷயம் விசாரிக்கப்பட்டது. தொழில்நுட்பக் குழுக்கள் மின்னஞ்சல் அனுப்பியவரைக் கண்டுபிடிக்க முயன்றன. அதில் மிரட்டல் செய்தி இருந்தது.
அதிரடி காட்டிய காவல்துறை:
விசாரணையின் அடிப்படையில், மின்னஞ்சல் அனுப்பியவர் லக்னோவின் சின்ஹாட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அனுப்பியவர் ஒரு பள்ளி மாணவர். அவர் தனது 11 ஆம் வகுப்பை முடித்துவிட்டு 12 ஆம் வகுப்பைத் தொடங்க உள்ளார். இங்குள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, பிரதமர் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சரைக் கொலை செய்யப்போவதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக ஊடக நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153A (1b) (நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல், அல்லது பொது அமைதியைக் குலைக்கக்கூடியது), 505 (1b) (பொதுமக்களுக்கு அச்சம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தக்கூடிய செயல்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட, தெற்கு மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, அங்கு வெடிகுண்டு வெடிக்க வைக்க போவதாக மிரட்டினார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்து தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நகைக்கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: